இர்ஃபானுடன் காதலில் விழுந்தது எப்படி என அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்கிறார் அவருடைய மனைவி சுதப்பா ஷிக்தர்.
இர்ஃபானை யார் தான் நேசிக்க மாட்டார்கள். அவர் நடிக்கவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார். நமக்குத் தேவைப்படும் போது அவரை அவருடைய கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு ரசிக்கலாம். பான் சிங் தோமரில் ஒரு கொள்ளைக்காரனாக அவரை எவ்வளவு ரசித்தோமா அதே அளவு நம்மால் அவரை பிக்குவிலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது. லஞ்ச்பாக்ஸ் படத்தில் சாஜன் ஃபெர்னாண்டஸாக நம் மனங்களைக் கொள்ளையடித்தவர் அவர். அங்ரேஸி மீடியம் படமும் அந்த ரகம் தான். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இர்ஃபானின் ஈர்ப்புவிசையை எடுத்துரைக்க வார்த்தைகள் தான் போதாது.
“நானும் இர்ஃபானும் சிந்தனை ரீதியாக இரு துருவங்கள். இர்ஃபான் அதிகம் பேசமாட்டார். ஆனால் நான் அதிகமாகப் பேசுவேன். ஆனால் எங்களை இணைத்தது ஒரே ஒரு புள்ளிதான். நான் டெல்லியில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு சினிமா, மியூஸிக், கலை என நல்ல எக்ஸ்போஸர் இருந்தது. அவரைப் பார்த்த மாத்திரைத்திலேயே நான் அவர் நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தைத் தெரிந்து கொண்டேன். நானும் அவரும் தேசிய நாடகப் பள்ளியில் தான் பார்த்தோம். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. நாங்கள் 1995ல் திருமணம் செய்தோம். பாபில், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
2003ல் தான் இர்ஃபான் திரைக்கு வந்தார். ஹாஸில் அவரின் முதல் படம். ஆனால், 53 வயதில் அவர் யாரும் செய்யத் தயங்கும் கதாபாத்திரங்களில் கூட நடித்துவிட்டார்.
இர்ஃபான் கான் எப்போதும் சொல்வார், ‘உனக்கு எப்போதும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கும் பழக்கம் உள்ளது. அதனால் தான் நாம் இணைந்துள்ளோம்’ என்பார். இத்தனை ஆண்டுகள் பிறகு. எனக்கு எல்லாம் தெளிவாகப் புரிகிறது. இது எல்லாம் விதி. அதனால் தான் நாங்கள் இணைந்தோம் என நினைக்கிறேன். நான் முதன் முதலில் ஒரு மதிய வேளையில் இர்ஃபானைப் பார்த்தேன். ஒல்லியான தேகம், கருப்பு நிற கால்சட்டை, வெளிர் பச்சையில் ஒரு பிரின்ட்டட் ஷர்ட் அணிந்திருந்தார். ஒரு ஸ்லிங் பேக் வேறு அணிந்திருந்தார். அவரைப் பார்த்தபோது அவர் எனக்கானவர் என்று தோன்றவில்லை. ஆனால் அப்புறம் அவர் தான் என்னவர் எனப் புரிந்தது.” சுதப்பா ஷிக்தர் இவ்வாறாக தனது காதல் கணவர் பற்றி அழகாகப் பேசினார்.
இன்று இர்ஃபானின் கானின் பிறந்தநாள். அவரை இந்தியத் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அந்த உன்னதமான கலைஞர் உறங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் விட்டுச் சென்ற கலைப்படைப்புகள் நிழலாக நம்முன் என்றும் நிலைத்திருக்கும். திரைவானில் என்றும் மறையாமல் மின்னும் நட்சத்திரம் இர்ஃபான் கான்.