ஐ.நா சபையால் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெண் சிசுக் கொலைகளை தடுக்கவும், பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான உரிமையை நிலைநாட்டவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் பெண் குழந்தைகளை கௌரவிக்கப்படுவதற்கும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் இக்கட்டுரையில் தமிழ் சினிமாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை போற்றும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ள பாடல்கள் குறித்து காணலாம்.


இந்த பாடல் எந்த வயது பெண்களுக்கும் ஏற்ற பாடல்களாக காலத்தின் போக்கில் அமைந்தது தான் அதன் வெற்றி அமைந்துள்ளது. பெண்கள் என்றாலே தேவதைகள் தானே...போராட்டக்குணமும் அவர்களுடன் இணைந்து பிறந்தது தான். அவர்கள் நினைத்தால் எப்படிப்பட்ட காரியங்களிலும் வெற்றியை பெறும் அளவுக்கு திறமைசாலிகள் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் கண்கூடாகவே சமூகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 


1. கண்ணின் மணியே 


கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் கை வண்ணத்தில் சுஹாசினி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக் நடிப்பில் வெளியான படம் மனதில் உறுதி வேண்டும். இப்படம் பல பெண்களின் மனதில் உறுதியை ஏற்படுத்திய படம் என சொல்லலாம். இதில் இடம்பெற்ற கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா பாடலின் ஒவ்வொரு வரியும் அநீதிகளுக்கு எதிராக பெண்களை போராடச் சொல்லும் வகையில் இடம் பெற்றிருக்கும்.  உலகமெல்லாம் விடிந்த பின்னரும் உங்களின் இரவு விடியவில்லை என்ற வரிகள் இன்றைய காலத்திற்கும் பொருந்திப் போகிறது. 


2. ஒரு தென்றால் புயலாகி 


பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் படத்தில் ரேவதி, பாண்டியன், பிரதாப் கே போத்தன் ஆகியோர் நடித்திருந்த நிலையில் 1984 ம் ஆண்டு இப்படம் வெளியாகியிருந்தது. இதில் ஒரு தென்றல் புயலாகி வருதே பாடல் பெண்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. 


3.நதியே நதியே 


வசந்த் இயக்கத்தில் அர்ஜூன், ஜோதிகா, மீனா ஆகியோர் நடித்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் “ரிதம்”. இந்த படத்தில் இடம் பெற்ற நதியே நதியே பாடல் பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும். நதிகளுக்கு ஏன் பெண்ணின் பெயர் வைக்கப்பட்டது, பெண் சக்தி எவ்வளவும் பெரியது என்பதை பாடலின் வழியே அழகாக வைரமுத்து எழுத உன்னிமேனன் தன் குரல் மூலம் உயிரளித்திருப்பார். 



4. ஆராரிராரோ 


அமீர் இயக்கத்தில் ஜீவா, கஜாலா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்த படம் “ராம்”. 2005 ஆம் ஆண்டு வெளியான இதில் இடம் பெற்ற “ஆராரிராரோ” பாடல் தாய்மையை போற்றும் பாடல்களில் முதன்மையானதாக உள்ளது. தாயை புகழ்ந்து பாடப்படும் பாடல்களுக்கு மத்தியில் தாய்க்கும் மகனுக்குமான உறவை விளக்கும் பாடலாக அமைந்தது. 



5. வாடி ராசாத்தி 


நடிகை ஜோதிகாவுக்கு கம்பேக் கொடுத்தப்படமாக அமைந்த “36 வயதினிலே” படத்தில் இடம் பெற்ற வீட்டில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் புறக்கணிப்புகளை கடந்து வாழ்க்கையில் சாதிக்க தூண்டும் ஒரு பாடலாக அமைந்தது. குறிப்பாக பெண்களின் திறமைகளை என்னதான் காலம் மாறினாலும் பூட்டி வைக்கிறார்கள் என்பதை வரிகள் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்கள். 



6. வா வா என் தேவதையே 


அப்பாவாக பிரகாஷ்ராஜ், மகளாக த்ரிஷா நடித்த “அபியும் நானும்” படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள். ஒரு தந்தை மகள் பாசம் எப்படி இருக்க வேண்டும் என தமிழில் உதாரணம் சொல்லப்படும் படங்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு. தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்...பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் போன்ற வரிகள் பெண் குழந்தைகள் மீதான அன்பை பிரதிபலித்தது. 



7. உனக்கென வேணும் சொல்லு 


என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்ற ”உனக்கென்ன வேணும் சொல்லு” பாடல் சம காலத்தில் தந்தை, மகளுக்குமான அன்பை வெளிப்படுத்திய பாடல்களில் ஒன்று. உலகென்னும்…பரமபதம்… விழுந்தபின் உயா்வு வரும்…நினைத்தது நினையாதது… சோ்க்கப் போறோமே... வரிகள் வாழ்க்கையின் யதார்த்ததை விளக்கியது. 



8. ஆனந்த யாழை மீட்டுகிறாய் 


தங்க மீன்கள் படத்தில் இடம் பெற்ற ஆனந்த யாழை பாடல் தந்தை, மகள் அன்பை பசைசாற்றிய பாடல்களில் ஒன்று. நா.முத்துக்குமாரின் வரிகளும், யுவனின் இசையும் பாடலுக்கு பலம் சேர்த்திருந்தது. குறிப்பாக அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி என பெண் குழந்தைகளை தெய்வதற்கு ஈடாக ஓப்பீடு செய்யப்பட்டிருந்த வரிகள் அனைவரையும் கவர்ந்தது. 



9.ஒரு தெய்வம் தந்த பூவே 


மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடல் இந்த பட்டியலில் மிக முக்கியமான ஒன்று. இப்பாடல் அப்பா-மகள், அம்மா - மகள் என இரு வெர்ஷனிலும் படமாக்கப்பட்டிருக்கும். பொதுவாக அம்மா-மகள் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் தமிழ் சினிமாவில் குறைவு. 



10. கண்ணான கண்ணே 


அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற “கண்ணான கண்ணே” பாடல் மீண்டும் தந்தை, மகள் அன்பை பசைசாற்றிய பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் டி.இமான் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.