காரிமங்கலம் அருகே ஆண் வேடம் அணிந்து மினிசரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி சென்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்து, மினி சரக்கு வாகனம், ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

 

 

கர்நாடகா மாநிலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் வழியாக சேலம், ஈரோடு கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசால் தடை செய்த குட்கா அதிகளவில் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதனையும் மீறி குட்கா கடத்தலில் ஈடுப்படுபவர்கள் பல்வேறு நூதன முறையில் குட்கா கடத்தி செல்கின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி சோதனை சாவடியில், காரிமங்கலம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர் டிப்டாப்பாக உடை அணிந்து மினிசரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். 

 

இதனை கண்ட காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகத்தை ஓட்டிவந்த ஓட்டினரிடம் விசாரணை செய்த போது பெண் குரல் போன்று இருந்தது. பிறகு தீவிரமாக விசாரணை செய்த போது வாகனத்தை ஓட்டி வந்த ஆண் இல்லை,  விிழுப்புரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி(36) என்ற பெண் என்பவது தெரியவந்தது. தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  900 கிலோ குட்கா  பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து ஆண்வேடம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த ஈஸ்வரியை கைது செய்து, வாகனம் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் ஆண் வேடமணிந்து, பெண் பெங்களூரிலிருந்து குட்காவை கடத்தி வந்த சம்பவம் காவல் துறையினரிடயே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

 

-----------------

 

 

புரட்டாசி நடு சனியை ஒட்டி தருமபுரி அருகே உள்ள மூக்கனூர் பெருமாள் மற்றும் மணியம்பாடி வெங்கடரமன சுவாமி கோயில்களில் நீண்ட வரிசையில் இன்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு.

 

தமிழக முழுவதும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் பெருமாள் மட்டும் வெங்கட்ராமன் சுவாமிகளை சனிக்கிழமை நாட்களில் விரதம் இருந்து வணங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கி இன்று மூன்றாவது (நடு) சனி என்பதால் பல்வேறு பிரசித்தி பெற்ற பெருமாள் வெங்கட்ராமன் உள்ளிட்ட திருக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மூக்கனூர் பெருமாள் கோயில் மற்றும் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி வெங்கட்ராமன் சாமி கோயில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வணங்கினர். இந்தக் கோயில்களில் புரட்டாசி நடு சனியை ஒட்டி வெங்கட்ராமன் சுவாமி மற்றும் பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புரட்டாசி நடு சனி என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயில்களில் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து துளசி பெற்று விரதத்தினை முடித்தனர். மேலும் சிலர் கோயில்களிலே சமையல் செய்து உண்டு விரதத்தினை முடித்தனர். தொடர்ந்து கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.