'இந்தியன் 2'  படத்திற்காக தன்னை தயார்படுத்திய தன்னுடைய உடற்பயிற்சியாளருக்கு காரை பரிசாக வழங்கி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.


 






1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் இப்படத்தின் 2 ஆம் பாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில்  22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ‘இந்தியன் 2’ குறித்த அறிவிப்பு வெளியானது. 




லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், விவேக், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


 






தொடர்ந்து நடிகர் விவேக்கின் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது ஆகிய காரணத்தால் இவர்களுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது.


 






முதலில் கமல் இல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கமல் சார்ந்த காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்காக தனது உடலை தயார்படுத்திய தனது உடற்பயிற்சியாளருக்கு நடிகர் கமல்ஹாசன் ரெனால்ட் காரை பரிசாக கொடுத்துள்ளார்.