புஷ்பா 2, இந்தியன் 2 மற்றும் அஜய் தேவ்கனின் ‘சிங்கம் அகெய்ன்’ ஆகிய பான் இந்தியா படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்ள உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
புஷ்பா 2 ரிலீஸ் தேதி
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா த ரூல்’ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 1 திரைப்படம் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்து, இந்தியா தாண்டியும் ரசிகர்களைக் கவர்ந்தது.
புஷ்பா 1 திரைப்படத்துக்காக அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை சமீபத்தில் வென்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இப்படத்தின் பாடல்கள் குறிப்பாக பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த நிலையில், தேவிஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை வென்றார்.
இந்தியன் 2வுடன் மோதல்
இந்நிலையில், இன்று புஷ்பா 2 படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையைக் குறிவைத்து இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகும் என கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்களுள் ஒன்றான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
7 வில்லன்கள், நடிகர் கமல்ஹாசனுடன் மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் என உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம், விக்ரம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு மாபெரும் வெற்றிப்படமாக இப்படம் அமையும் என எதிர்பார்த்து கமல் ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஜெயிலர் மேஜிக் நடக்குமா?
இந்நிலையில், பான் இந்திய அளவில் பெரும் பட்ஜெட்டுடன் உருவாகி வரும் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2படம் மற்றும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா த ரூல்' படங்கள் நேருக்கு நேர் மோதப் போகின்றன எனும் தகவல் கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
இதேபோல் சிங்கம் படத்தின் ரீமேக்கான, நடிகர் அஜய் தேவ்கனின் சிங்கம் சீரிஸின் அடுத்த பாகம் ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படமும் இதே தேதியில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் விடுமுறையை குறிவைத்து வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடிகள் வசூலைக் குவித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதேபோல் ஜெயிலருடன் இணைந்து இந்தியில் வெளியான கட்டார், ஓஎம்ஜி 2 ஆகிய படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், முதல் வார இறுதியில் இப்படங்கள் இணைந்து 140 கோடிகளுக்கும் மேல் வசூலித்து திரையரங்குகளுக்கு பெரும் லாபத்தைத் தந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின விடுமுறையைப் போல் வரும் 2024ஆம் ஆண்டும் வெளியாகும் திரைப்படங்கள் கலெக்ஷன் அள்ளுமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?