ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ (Indian 2). நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நடிகர்கள் சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
7 வில்லன்களை கமல் இப்படத்தில் எதிர்கொள்ள உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பெரும் இடையூறுகள், பல ஆண்டு படப்பிடிப்பு, இன்னல்களைத் தாண்டி தற்போது இப்படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி இப்படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை அந்தந்த மொழிகளின் பிரபல நடிகர்கள் வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் நிறைவுற்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படக்குழுவுடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
“எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது” எனும் கமல்ஹாசனின் மாஸ் வசனத்துடன் முன்னதாக வெளியான இப்படத்தின் இண்ட்ரோ வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் 1996இல் முடிந்த இப்படம் 2023இல் தொடங்கும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் அனிருத்தின் இசையும், இந்தியன் பட வரிசையில் உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை பரந்து ஊழலை எதிர்க்கும் வகையிலும், கொரோனா சூழலை பிரதிபலிக்கும் வகையிலும் காட்சிகளும் இப்படத்தின் அறிமுக வீடியோவில் இடம்பெற்று லைக்ஸ் அள்ளின.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் நீளம் கருதி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.