இந்தியன் 2 திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு கோடை ஸ்பெஷலாக வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.


தடைகளைத் தாண்டி வெளியான இந்தியன் 2


கடந்த 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, பின் ஷூட்டிங் ஸ்பாட் விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட  பல்வேறு தடைகள் தாண்டி ஒரு வழியாக பல ஆண்டு எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.


லஞ்சம், ஊழலுக்கு எதிராகப் போராடிய இந்தியன் தாத்தாவான சேனாபதியின் மீள் வருகை, தற்போதைய அரசியல் சூழலில் அவரது செயல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி நேற்று முன் தினம் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில், கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள நிலையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


அதிருப்தி விமர்சனம் தாண்டி வசூலில் மாஸ்


இந்நிலையில், இந்தியன் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு இந்தியன் 2 திரைப்படம் அதிருப்தி விமர்சனங்களையும் மற்றொருபுறம் கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பு, பாடல் காட்சிகள் ஆகியவை பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.


இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ள தகவலின்படி, இந்தியன் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் 25.6 கோடிகள், இரண்டாவது நாளில் 16.7 கோடிகள் என மொத்தம் 42.3 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழில் மட்டும் 29.5 கோடிகள், இந்தியில் 2.4 கோடிகள், தெலுங்கில் 10.4 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 






மேலும் உலக அளவில் இந்தியன் 2 திரைப்படம் ரூ.85 கோடிகளுக்கும் மேல் 2 நாள்களில் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று வழக்கமாக மக்கள் தியேட்டர்களுக்குப்  படையெடுக்கும் நிலையில், இன்றுடன் இந்தியன் 2 திரைப்படம் ரூ.100 கோடிகள் என்ற மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.