விக்கிரவாண்டி: நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2,000 வாக்குகள் பெற்றுள்ளோம். இது முதலில் தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர் என விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கூறியுள்ளார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு  கடந்த ஜீலை 10 ஆம் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் 82.47 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல் நிலைபள்ளியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணி மற்றும் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை விட கூடுதலான வாக்குகள் பெற்று வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகமாக பெற்றிருந்தார். இடைத்தேர்தலில் 1,95,374 வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் 798 பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் உட்பட இடைதேர்தலில் மொத்தமாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 269 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாள்ர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளும் பாமக வேட்பாளர் சி அன்புமணி 56,296 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றிருந்தனர். 


இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அபிநயா...


நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரை கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்கு பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுக இளம்தலைமுறை வாக்காளர்களுக்கு கஞ்சா பட்டுவாடா செய்தனர். இது தேர்தலே இல்லை, திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர். வருங்காலங்களில் இடைத்தேர்தலை ஏலம் எடுத்துவிடுங்கள். அதனால் தான் அதிமுக பின்வாங்கியது. இது பணநாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம் என கூறினார்