இந்தியன் 2 


பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 


இந்தியன் தாத்தாவை பார்த்து சிலிர்த்துவிட்டேன்


விழாவில் பேசிய ஷங்கர் " இந்தியன் படம் வெளியானபோதே இந்தியன் 2 பண்ணலாம் என்று கமல் என்னிடம் சொன்னார். ஆனால் அப்போது என்னிடம் கதை எதுவும் இல்லை. பிறகு ஒரு 7 ,8 ஆண்டுகளுக்கு பிறகும் பத்திரிகைகளில் லஞ்சம் ஊழல் பற்றிய செய்திகளை பார்த்தேன். இந்த மாதிரியான ஒரு சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். 2.0 படம் முடித்ததும் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. கமல் சாரை இந்த படத்திற்கான ஃபோட்டோ ஷூட்டின்போது இந்தியன் தாத்தா லுக்கில் பார்த்தபோது எனக்கு சிலிர்த்துவிட்டது. 


கமல் 361 டிகிரியில் நடித்திருக்கிறார்.


கமல் சாரை 360 டிகிரி நடிகர் என்று நான் முன்பே ஒரு மேடையில் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் 361 டிகிரியில் நடிக்கக் கூடிய அளவிற்கு அப்டேட் ஆகியிருக்கிறார்.  இந்த படத்தில் ஒரு காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினோம். நான்கு நாட்களும் மேக் அப் போட்டுக் கொண்டு கயிற்றில் தொங்கியபடியே ஓவியம் வரைந்துக் கொண்டு பஞ்சாபி மொழியில் பேசி நடிக்க வேண்டும். இந்த காட்சியை கமலைத் தவிர வேறு ஒரு நடிகர் நடித்து நான் பார்த்ததில்லை.


இந்தப் படத்தில் ஆர்.கே லட்சுமணனில் கார்டூன் கதாபாத்திரம் ஒன்றை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். கமல் சாரை அன்று எப்படி பார்த்தேனோ அதே எனர்ஜியோடு தான் இன்றும் பார்க்கிறேன். உலகம் முழுக்க சினிமாவில் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்." என்று கமலைப் புகழ்ந்து தள்ளினார் ஷங்கர்


இந்தியன் 2 சண்டைக்காட்சிகள் அதிரும்


"இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் ஓப்பனிங் ஆக்‌ஷன் காட்சியை அனல் அரசு வடிவமைத்திருக்கிறார். க்ளைமேக்ஸ் ஃபைட் சீன் அன்பறிவு செய்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கும். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. அதை எல்லாம் நீங்கள் டிரைலரில் பார்ப்பீர்கள்.


இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு தான் நல்லவர். கெட்டவர்களுக்கு ரொம்ப மோசமான வில்லன்" என்று இந்தியன் 2 பற்றி பயங்கரமாக ஹைப் கொடுத்துள்ளார்.