வேவ்ஸ் மாநாடு 2025


பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 2025 ஆம் ஆண்டு இந்தியா வேவ்ஸ் என்கிற திரைத்துறை கலைஞர்களுக்கான மாநாடு ஒன்றை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். வேவ்ஸ் (Waves - World Audio Visual Entertainment Summit) எனப்படும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்தும் திரைத்துரை மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவின் திறமையை வெளிக்காடும் விதமாகவும் இந்திய கலைஞர்கள் பல்வேறு சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் இந்த மாநாடு ஏற்படுத்தி கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 


வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி டெல்லியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி " இந்திய படைப்புகளை சர்வதேச தளத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்த மாநாடு அமையும். பாலிவுட்டைச் சேர்ந்த அல்லது மற்ற பிராந்திய சினிமாவைச் சேர்ந்த இளம் படைப்பாளிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் திரைத்துறையைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வில் ஆர்வம் காட்டவேண்டும்.  இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உருவெடுக்க இதுபோன்ற நிகழ்வுகள் அவசியமானவை. அதனால் மூத்த கலைஞர்கள் , தொலைக்காட்சித் துறை , அனிமேஷன் , இணைய விளையாட்டு , என பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் இந்த மாநாட்டிற்கு வரவேற்கிறேன்


இந்த முக்கியமான தருணத்தில் 100 ஆவது பிறந்தநாள் காணும் மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ் கபூர் , தெலுங்கு சினிமாவில் முக்கிய பங்காற்றிய அக்கிணேனி ராவ் , தபன் சின்ஹா , பாடகர் முகமது ரஃபி போன்ற கலைஞர்களை நினைவுகூர விரும்புகிறேன். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றி அடுத்தடுத்த தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததால் இவர்களின் காலம் இந்திய சினிமாவின் பொற்காலம் என கருதுகிறேன். " என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.