TVK VIJAY: ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தவெக தலைவர் விஜய் அறிக்கை:


தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “


அனைவருக்கும் வணக்கம்.


இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில்  ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.






இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். நன்றி” என தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திபின்போது விஜய் உடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர்.



விஜய் கைப்பட எழுதிய கடிதம்


முன்னதாக விஜய் கைப்பட எழுதி காலையில் வெளியான கடிதத்தில், “


அன்புத் தங்கைகளே!


கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆரளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.


எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணாவாகவும், அரணாகவும்.   எனவே அதை பற்றியும் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்துஙகள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என குறிப்பிட்டு இருந்தார். அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநில அளவில் பேசுபொருளானது. அதுகுறித்து ஆளும் திமுக அரசிடம் வலியுறுத்தினாலும், பெண்கள் பாதுகாப்பிற்கு எந்த பலனும் இல்லை எனும் தொனியில் விஜய் கடிதம் எழுதி இருந்தார்.


அதன் தொடர்ச்சியாகவே இன்று ஆளுநரை சந்தித்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.