Independence Day Songs: தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பாடல்களில் தேச பக்தியை ஊட்டும் பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தாயின் மணிக்கொடி
தமிழ் சினிமா தேச பக்தி பாடல்கள் என வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடம் வகிக்கும் பாடலாக எப்போதும் இருப்பது, ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்கிந்த் படத்தில் இடம் பெற்றுள்ள, “ தாயின் மணிக்கொடி” பாடல் தான். குறிப்பாக இந்த பாடலில் இடம் பெற்றுள்ள, “ சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும் சொல்லுகிறோம் எங்கள் முதல் வணக்கம்” எனும் வரிகளை கேட்கும்போது மனதிற்குள் ஒருவித உணர்வை ஊட்டும். டெக்னாலஜி வளர்ந்த இந்த யுகத்தில் ஸ்டோரிகளிலும், ஸ்டேட்டஸ்களிலும் நிரம்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.
கப்பலேறி போயாச்சு
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய திரைப்படம் இந்தியன். இப்படத்தில் வரும் கப்பலேறி போயாச்சு பாடல் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு கச்சிதமாய் பொருந்திப் போகக்கூடிய பாடல்களில் ஒன்று. குறிப்பாக ”கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா விடியும் வரையில் போராடினோம் உதிரம் மதியாய் நீராடினோம்” இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் கப்பல் மூலமாக வெளியேறினார்கள்.
இதனால் இந்த பாடல் துவங்குவதே அதனை நினைவு படுத்துவதைப் போல உள்ளது. நடு இரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதையும் இப்பாடல் சுட்டிக்காட்டும். மேற்கொண்டு வரும் வரிகளும் சுதந்திர போராட்டங்களை போற்றும் வகையில் அமைந்திருக்கும் என்பதால், சுதந்திர தின கொண்டாட்ட பாடல்களில் இந்த பாடல் டாப் லிஸ்ட்டில் இருக்கும்.
தமிழா.. தமிழா..
சுந்தந்திர தினமோ குடியரசு தினமோ நிச்சயம் கே.டிவில் இடம் பெறக்கூடிய படங்களில் ஒன்று ரோஜா. இந்த படத்தில் உள்ள தமிழா தமிழா பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இந்த பாடலில் வேற்றுமையில் இந்தியா என்பதை மிகவும் வலிமையாக எடுத்துக்கூறும் பாடல் வரிகள். குறிப்பாக ”நவபாரதம் பொதுவானது இது வேர்வையால் உருவானது பல தேகமோ எருவானது அதனால் இது உருவானது” இந்த வரிகள் சுதந்திர போராட்டக் களத்தில் பலர் தங்களின் உயிரை தியாகம் செய்து அதில் இந்த புதிய நாடு உருவாகியுள்ளது என்பதை க் க்விளக்குவதாக உள்ளது.
அச்சம் அச்சம் இல்லை
இந்திரா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அச்சம் அச்சம் இல்லை பாடலும் சுதந்திர தின கொண்டாட்ட பாடல்களில் கட்டாயம் இருக்கும் பாடல்தான். இந்த பாடலின் இசையும் வரியும், பாடல் காட்சிப் படுத்தப்பட்ட திரைக்கதையும் இந்த பாடலை தேச பற்றுப் பாடலாக மாற்றி விட்டது. ”காலம் மாறிப்போச்சு நம் கண்நீர் மாறிபோச்சு நாளை நல்ல நாளை எந்த நம்பிக்கை உண்டாச்சு” மேலும் அந்த பாடலில் உள்ள வரிகள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் நமக்கு சுதந்திர இந்தியா கிடைத்துள்ளது என்பது போல் இருக்கும்.
தாய் மண்ணே வணக்கம்
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக உருவாக்கிய தனிப் பாடல் தான் தாய் மண்ணே வணக்கம். இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நமக்கு புல்லரித்துவிடும். அப்படியான தனிப்பாடல், இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நெருங்கிக்கொண்டு இருக்கும் போது மும்பை வான்கடே மைதானத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் தொடங்கி இந்த போட்டியியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் வரை அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் தள்ளிய பாடல் இது. இந்த பாடல் சுதந்திரத்தையும் நாட்டு பற்றையும் போற்றும் விதமாக உள்ளது.