யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள், இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்.


இன்றே கடைசி நாள்:


இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் 30ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விருப்பமுள்ள மாணவர்கள் https://tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்து வருகின்றனர்.


கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் இன்று மாலை 5.30 மணி வரை சமர்பிக்கலாம்.


எப்படி விண்ணப்பிக்கலாம்?


https://tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அரும்பாக்கம் ஹோமியோபதி துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தபாலில் அனுப்பினால், இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை அலுவலகம், சென்னை 600106 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட உள்ள இடங்கள்:


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த இரண்டு அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. அது மட்டுமின்றி 17 தனியார் கல்லூரிகளில் மொத்தமாக 1,517 இடங்கள் உள்ளன. இதில்,  மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்களும்,  நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன.


ஐந்தரை ஆண்டு படிப்பு:


ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2022-23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்களை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை தெரிவித்துள்ளது.


கலந்தாய்வு எப்போது?


விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர்  மாதத்தில் மாணவர் சேர்க்கை துவங்கும் என, இந்திய மருத்துவக் கல்வி தேர்வு குழு செயலர் மலர்விழி ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இதற்கான, பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.