காஞ்சிபுரத்தில் நேற்று இரவில் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் முடிவடைந்தாலும், கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்களும் வாகனம் ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருந்தது.

 

திடீரென கருமேகங்கள் சூழ்ந்து

 

காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இரவு வேளையில் மழை பெய்ததால்  பொதுமக்களுக்கு  வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

பள்ளிகள் இயங்கும்:

 

இரவு துவங்கிய மழை காலை வரை பெய்துகொண்டு இருந்தது. காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் தூரல் மழையும் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


வெளுத்து வாங்கும் மழை:


சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், , அம்பத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு,  புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 


 


மகிழ்ச்சியும் - அவதியும்:


3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழை பெய்து வருவதால், பகல் நேரங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக வாட்டி வதைத்து வரும் வெய்லின் தாக்கம் குறைந்துள்ளது. சில்லென்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.