இம்ரான் கான்


 நீங்கள் இந்தி படங்கள் தொடர்ச்சியாக பார்க்கும் வழக்கம் கொண்டிருந்தால் இம்ரான் கான் என்கிற நடிகரை நிச்சயம் ரசித்திருப்பீர்கள். ஜானே து யா ஜானே நா, மேரே ப்ரதர் கி துல்ஹனியா, டெல்லி பெல்லி உள்ளிட்ட சில நல்ல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இம்ரான் கான். திறமைகள் இருந்து  அதற்கான உழைப்பைக் கொடுத்தும் சில நடிகர்களுக்கு தேவையான வாய்ப்புகளும் அங்கீகாரமும் கிடைக்காமல் போவது சினிமாவில் மிகச் சாதாரணமானது. ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு சில நடிகர்களுக்கு அதை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. அப்படியா ஒரு நடிகர் இம்ரான் கான்!


கடைசியாக கேமரா முன் நின்ற தருணம்


சமீபத்தில் இம்ரான் கான் தான் கடைசியாக நடித்த ‘கட்டி பட்டி’ என்கிற படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனமும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.






கடந்த 2015ஆம் வெளியான கட்டி பட்டி என்கிற படத்தில் கங்கனா ரனாவத்துடன் இணைந்து நடித்தார் இம்ரான் கான். இது குறித்து அவர் பகிரும்போது  கட்டி பட்டி படத்துக்காக நான் எனது முழு உழைப்பையும் செலுத்தினேன். ஆனால் நான் கேமரா முன் நிற்கும் கடைசி படமாக இந்தப் படம் இருக்கும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.


இந்தப் படத்தின் படப்பிடிப்பில் என்னைச் சுற்றி இருந்தவர்களுடன் எனக்கு ஒரு நல்ல உறவு ஏற்பட்டது. கங்கனா ரனாவத் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார், படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி இப்படியான ஒரு கதையை மிக அழகாக சொல்லியிருந்தார். அனால் இந்தப் படம் வெளியான உடனே மிகப்பெரிய சரிவை சந்தித்தது.


இந்தப் படத்தின் கதையை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து நான் என்னை இதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டேன். அப்படி இல்லாமல் போனபோது என் இதயம் நொறுங்கி தான் போனது“ என்று இம்ரான் கான் பகிர்ந்து கொண்டார். 


மீண்டும் திரையில் வருவாரா?


இம்ரான் கான் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை என்றால் தனது நடிப்பு வாழ்க்கையில் இம்ரான் கான் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.