கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மூளை சாவு அடைந்த வாழப்பட்டு பகுதியை சேர்ந்த மாயவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர்.

 

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். 

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள வாழப்பட்டு பகுதியை சேர்ந்த மாயவன் (62) என்பவர் கடந்த திங்கள்கிழமை சாலை விபத்துக்குள்ளாகி கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மூளை சாவு அடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் தானம் குறித்து மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் குடும்பத்திற்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு, மாயவன் அவர்களின் கண்கள், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. 

 

தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாயவன் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊரான நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர்  மலர் வளையம் வைத்து அரசு  மரியாதை செலுத்தினார்கள்.