நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படம் வெளியாகவுள்ள நிலையில் அவர் நேர்காணல் ஒன்றில் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார். ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உட்பட பலரும் நடித்துள்ளனர். மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு சமந்தா ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கியுள்ளார். முன்னதாக myositis என்னும் அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சமந்தா தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள குஷி, சாகுந்தலம் ஆகிய படங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது.
ஆனால் நேற்றைய தினம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவுகளை வெளியிட்ட சமந்தா யசோதாவின் ப்ரோமோஷன்களுக்கு தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பேட்டி ஒன்றில் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சமந்தா பகிர்ந்து கொண்டார். அப்போது இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் உடல்நிலையை எவ்வாறு சமாளித்தீர்கள் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு உணர்ச்சிவசப்பட்ட சமந்தா, நான் எனது பதிவில் (இன்ஸ்டாகிராம்) சொன்னது போல், சில நாட்கள் நல்லது, சில மோசமானவை. சில நாட்களில் இன்னும் ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருக்கும் என்று உணர்ந்தேன். ஆனால் நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டேனோ என்று ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கு போராடவே வந்துள்ளேன்.
மேலும் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். myositis பிரச்சனையால் எனது உயிருக்கு ஆபத்து என பதிவுசெய்யப்பட்ட பல செய்திகளை நான் பார்த்தேன். என்னுடைய பிரச்சனையால் உயிருக்கு ஆபத்து இல்லை. அதேபோல் நான் இன்னும் இறக்கவில்லை. ஆக அந்த செய்திகள் மிகவும் அவசியமற்றவை. எனவே தனது உடல்நிலை குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் தவிர்த்திருக்கலாம் எனவும் சமந்தா தெரிவித்துள்ளார்.