தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பாலும் வித்தியாசமான குரலாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சத்யன். பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமானது இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "நண்பன்" திரைப்படம் மூலம் தான். அப்படத்தில் நடிகர் சத்யன் ஸ்ரீவட்சன் எனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை அனைவரும் சைலன்சர் என அழைத்தது மிகவும் பிரபலமானது. இப்படத்தின் மூலம் ஏராளமான பாராட்டுகளை பெற்ற சத்யன் நகைச்சுவை நடிகராக தன்னை முத்திரை பதித்த திரைப்படம். 


 



 


காமெடியனாக முத்திரை பதித்த சத்யன்:


 


நடிகர் சத்யன் தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளரான மாதம்பட்டி சிவகுமாரின் மகனாவார். மேலும் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நையாண்டி நடிகரான சத்யராஜின் உறவினர் என்பது அனைவரும் அறிந்ததே. சிவா மனசுல சக்தி, தேவதையை கண்டேன், மாயாவி, நவீன சரஸ்வதி சபதம், நண்பன், ஆதவன், ராஜா ராணி, துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் நடிகர் சத்யனின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள். 


 






 



ஹீரோவாக அறிமுகம்:


 


சத்யனை ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்த்த பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் அவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தான் அறிமுகமாகியுள்ளார். 2000 ஆம் ஆண்டு டி. பாபு இயக்கத்தில் வெளியான "இளையவன்" திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யா தான் சத்யனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். "பிரியமுடன்" மற்றும் "நேருக்கு நேர்" திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் கௌசல்யா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் கரண், வையாபுரி, சிவகுமார், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் இசைஞானி இளையராஜா. இப்படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகளை கடந்துவிட்டது. 


 



பெரிய படம் தான் என்னுடைய சாய்ஸ்:


 


துப்பாக்கி, நண்பன் போன்ற படங்களில் சிறப்பாக நடித்த சத்யனை  சமீபகாலமாக படங்களில் பார்க்க முடிவதில்லை. ஒரு முறை இந்த கேள்வி சத்யனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களானாலும் ஒரு சில பெரிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே நான் விருப்பப்படுகிறேன் என்றார் சத்யன்.