தமிழ் சினிமா பல தலைமுறைகளை கடந்தாலும் ரசிகர்கள் மனதில் என்றுமே குடிகொண்டு இருக்கும் ஓர் இசை அரசன் என்றால் அது ஒன் அண்ட் ஒன்லி இளையராஜா தான். அவர் ஒரு ஈடு இணையில்லா ஒப்பற்ற இசைமேதை. அவரின் சாதனைகளை எத்தனை பக்கங்களில் வேண்டுமானாலும் எழுதலாம். 1976ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படம் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தார்.
முதல் படத்திலேயே ராசியான ஒரு இசையமைப்பாளராக திரையுலகத்தையே கொண்டாட வைத்தார். நாட்டுப்புற இசையையும், மேற்கத்திய இசையையும் கலந்து அவர் இசையமைப்பது அவருக்கே உரித்தான தனி ஸ்டைல். முதல் 5 ஆண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்த பெருமையை பெற்றார். தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னராக கொண்டாடப்பட்ட இளையராஜா அவரின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜா இன்றைய காலகட்டத்திலும் அதே ஆர்வத்துடன் பயணிப்பதற்கு முக்கியமான காரணம் அவரின் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றி கொள்ளும் திறமையும் தான்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் அவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் தன்னுடைய தனித்துமான குரலால் வித்தியாசமான ஒரு உணர்வை கொடுத்தார். அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்த பெரும்பாலான படங்களின் முதல் பாடலை அவரை வைத்தே பாட வைத்தால் சென்டிமெண்டாக படம் நன்றாக ஓடும் என பாட வைத்தார்கள்.
அப்படி இளையராஜா பாடிய முதல் பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
- 'கரகாட்டக்காரன்' படத்தில் பாட்டாலே புத்தி சொன்னான்...,
- 'என் ராசாவின் மனசிலே' படத்தில் இடம் பெற்ற குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே...,
- 'நாயகன்' படத்தில் தென்பாண்டி சீமையிலே...,
- 'உதிரிப்பூக்கள்' படத்தில் இந்த பூங்காற்று தாலாட்ட...,
- 'ஆண் பாவம்' படத்தில் இந்திர மண்டலம் சந்திர மண்டலமும் இந்த சினிமா தான்...,
'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் இடம் பெற்ற டைட்டில் பாடலான எங்க ஊரு பாட்டுக்காரன், எல்லாத்திலும் கெட்டிக்காரன்... இப்படி இளையராஜா பாடிய எத்தனையோ பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன. அவை இன்று எவர்கிரீன் பாடல்களாக நெஞ்சங்களை வருடுகின்றன.