இளையராஜா , இந்த பெயருக்கு அறிமுகம் தேவை இல்லை. 45ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது முதல் படமான அன்னக்கிளிக்கு இசை அமைத்தார். தேவராஜ்-மோகன் இயக்கிய இந்த படத்தில் முதல் முறை இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இளையராஜா. தன்னை ஒரு நல்ல இசையமைப்பாளராக நன்கு நிலைநிறுத்திக் கொண்டார்.1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்த பெருமை மேஸ்ட்ரோவை சாரும் .
கிராமபுர இசையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமை இவரையே சேரும் , தனது இசையால் அனைத்து வயதினரையும் கட்டிப்போட்ட மாயக்காரன். 70ல் தொடங்கி இன்று வரை அவர் பாடல் ஒலிக்காத வீடுகள் இல்லை . ராஜா பாடல்களுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு . சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை மேலும் மேலும் மெருகேற்றி கொண்டவர் இளையராஜா .
இந்திய திரைப்படங்களில், மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில், இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியவர். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா, இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது, 25ஜனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.
தமிழில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குப் பிறகு, இளையராஜா தமிழ்-தெலுங்கு இருமொழி படமான 'அன்னை ஓரு ஆலயம்' மூலம் டோலிவுட்டில் நுழைந்தார். இப்படத்திற்காக இளையராஜா ஆறு பாடல்களை இசையமைத்தார் ,இரு மொழிகளிலும் பாடல்கள் மிக பெரிய ஹிட் ஆனது .
இளையராஜாவின் 100வது படமாக அமைந்த படம் "மூடு பனி " . பாலு மகேந்திர இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படதில் " என் இனிய பொன்நிலாவே " இன்னும் பலரின் ரிங்க்டோனாக இருக்க கூடிய பாடலை இசையமைத்தார் .
பாலு மகேந்திரா இயக்கிய 'சத்மா' படத்தில் இளையராஜா இந்தியில் அறிமுகம் ஆனார் . இந்த படம் இயக்குனரின் சொந்த படமான 'மூன்றாம் பிறை" யின் ரீமேக் ஆகும், மனதை நெகிழவைக்கும் பாடல்கள் படத்தில் அமைத்து இருந்தன . இதனை தொடர்ந்து இளையராஜா பல இந்தி படங்களுக்கு இசையமைத்தார் .
இளையராஜா மற்றும் மணி ரத்னம் ஆகியோரின் சூப்பர் ஹிட் படமான, இளையராஜாவின் 500 வது படமான 'அஞ்சலி', ராஜா இசை வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் படமாக அமைந்தது .மேலும் இந்த படம் 1991 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கான அதிகாரபூர்வ நுழைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது .
1000 படங்களுக்கு இசையமைத்த மகத்தான சாதனையைத் தொட்டு அரிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. "தாரை தப்பட்டை " படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்கு பிறகு சினிமாவில் மீண்டும் இசை அமைத்தார் . பாலா இப்படத்தை இயக்கினார் .மேலும் 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணி ஸ்கோருக்கான தேசிய விருதை இப்படம் வென்றது .
தற்பொழுதும் ஐந்துக்கு மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து கொண்டு இருக்கிறார் . இன்னும் பல்லாண்டு காலம் இந்த இசை பயணம் தொடர நாமும் இந்த இசை மேதையை வாழ்த்துவோம் . 45 ஆண்டுகள் கடந்தாலும் ஒவ்வொரு தலைமுறையின் நாடி நரம்புகளில் ரத்தமும், சதமுமாய் கலந்திருக்கும் இளையராஜாவின் இசைப்பயணம் இன்னும் தொடரட்டும்!