பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  மயிலாடுதுறை கொத்தத்தெரு பெரிய மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை கடைவெள்ளியை முன்னிட்டு நடைபெறும் தீமிதி உற்சவம் ரத்து செய்யப்பட்டதால், ஊஞ்சல் உற்சவம்  அரசின் வழிகாட்டுதல் படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் எளிமையாக நடைபெற்றது.






கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆலயங்களில் பக்தர்கள் பங்கேற்கவும் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மயிலாடுதுறை கொத்தத்தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை மாதம் கடை வெள்ளி தீமிதி உற்சவம் ரத்து செய்யப்பட்டது. 



ஊஞ்சல் உற்சவம்


 


சித்திரை மாதம் கடை வெள்ளியான இன்று அரசு உத்தரவுப்படி தீமிதி திருவிழாவை நடத்தாமல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து ஆலயத்தில் எளிமையாக ஊஞ்சல் உற்சவம் நிகழ்வு மட்டும் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



கோவில் நிர்வாகிகள்


விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றாலும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்று, முறைப்படி நடைபெறும் சம்பிரதாயங்களை செய்தனர். அலங்கார கோலத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழா, இம்முறை மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. கோவில் ஊழியர்கள் தான் பங்கேற்றனர் என்றாலும், அதிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களும், அரசு வழிகாட்டுதலை பின்பற்றி சமூக இடைவெளியுடன் விழாவை நடத்தினர்.