இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு...' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


 



 


இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம், கடந்தாண்டு மார்ச் 22 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் படமாக சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வசூலிலும் சாதனை படைத்தது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் கீரவாணி. 


 







அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் பல பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவிலும் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்றிருந்தது. 



அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Hollywood Foreign Press Association  சார்பில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை தட்டி சென்றது. படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 


 







அந்த வகையில் இசைமைப்பாளர் இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கம் மூலம் ”கீரவாணி, எஸ். எஸ். ராஜமௌலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினரின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த  வெற்றி. இந்த விருது பெற தகுதியானவர்கள். மிக்க மகிழ்ச்சி” என குறிப்பிட்டு வாழ்த்தினை ட்வீட் செய்துள்ளார்.  


மேலும் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு தெரிவித்து வருகிறார்கள்