12ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களைப் பெறாத மாணவர்களும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதலாம் என்று தேர்வை நடத்தும் என்டிஏ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 


இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  


இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.  2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. 


4 அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. இதற்கிடையே முதல் அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். 


முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.  


இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது. ’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்துள்ளது.


இதன்மூலம் 12ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களைப் பெறாத மெரிட் மாணவர்கள், ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ’’முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெறாத மாணவர்கள், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்’’ என்றும் என்டிஏ அறிவித்துள்ளது. 


மாணவர்களின் பல்வேறுகட்ட தொடர் கோரிக்கைகளை அடுத்து, இந்தத் தளர்வை வழங்கியுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.