எனக்குள் இசையானது மூச்சுக்காற்றைப் போல இயற்கையாக அமைந்து விட்டது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 


சென்னை ஐஐடியில் இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பான ஸ்பிக் மேகே-வின் 9வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று தொடங்கியது. ஒரு வாரம் நடக்கும் இந்த மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியில் திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி நல்லு மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சென்னை ஐஐடியில் “மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்” அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 


இதனையடுத்து சிறப்பு விருந்தினர்கள் ஆளுநர் இந்திரசேனா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 3டி வடிவிலான வீணை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு இசையை கற்றுக் கொடுத்தார். அவர்களுடன் இணைந்து இளையராஜா பாடினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஸ்பிக் மேகே தலைவர் ராதா மோகன் திவாரி, செயலாளர் சப்ய்சாச்சி, ஐஐடி டீன் சத்ய நாராயணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “இன்னைக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் சின்ன வயதில் கிராமத்தில் இசை கற்றுக்கொள்ள ரூ.400 பணத்துடன் சென்னைக்கு வந்தேன். இதுநாள் வரைக்கும் நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. ஒரு மையத்தை ஆரம்பித்து எல்லாருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளேன். நான் பிறந்த ஊரில் கற்றுக்கொடுக்க ஆள் இல்லை. ஒருவனுக்கு தாகத்தை உண்டு பண்ணும்போது அவன் தேடி தண்ணீரை கண்டுபிடித்து விடுவான். நான் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள்.


ஆனால் நான் வரும்போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இன்னும் இருக்கிறேன். இந்த ஐஐடியில் 200 இளையராஜா வர வேண்டும் என நான் நினைக்கிறேன். இசை எனக்கு மூச்சாக போய்விட்டது. அதேபோல் தான் இசை எனக்கு இயற்கையாக அமைந்தது. பாராட்டுகள் கிடைக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என பாரதியார் சொன்னார். ஆனால் நான், சென்றிடுவீர் எட்டுத்திக்கும்..கலைச் செல்வத்தை அங்கு கொண்டு சேர்ப்பீர் என சொல்கிறேன். அந்த மாதிரி இந்த மையம் அமைய வேண்டும்” என இளையராஜா தெரிவித்தார்




மேலும் படிக்க: Today Movies in TV, May 21: செவ்வாய்கிழமை ஸ்பெஷல்.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?