இந்தி சின்னத்திரையில் இருந்து நடிகையாக அறிமுகமானார் நடிகை  பாயல் ராஜ்புத்.  தற்போது இந்தி, தமிழ் தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து குறுகிய காலகட்டத்திலேயே பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.  பஞ்சாபி, இந்தி திரையுலகில் அறிமுகமானாலும் 'ஆர் எக்ஸ் 100 ' என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனம் பெற்றார். இயக்குநர் அஜய் பூபதியின் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான அப்படம் நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அஜய் பூபதியின் இயக்கத்தில் அடுத்து உருவான 'மங்களவாரம்' படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் தமிழில் 'செவ்வாய்கிழமை' என்ற தலைப்பில் வெளியானது. இப்படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தற்போது பாயல் ராஜ்புத் தான் சந்திக்கும் மிரட்டல் குறித்து சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


 



 


நேற்றிரவு எல்.பி.ஸ்டேடியத்தில் நடந்த டைரக்டர்ஸ் டே நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் பாயல் ராஜ்புத்தின் "ரக்ஷனா" படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இது நடந்து முடிந்த சில நிமிடங்களிலேயே இந்த படத்தை வெளியிட சோசியல் மீடியா மூலம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் பாயல் ராஜ்புத். 


இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் முதலில் "5Ws" என பெயரிடப்பட்ட இப்படம் 2019 மற்றும் 2020ம் ஆண்டு படமாக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் அவரின் 'மங்களவாரம்' வெற்றியை பணமாக்க முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார் பாயல். தனக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை செட்டில் செய்யாமல் படத்தின் ப்ரோமோஷனின் கலந்து கொள்ள சொல்கிறார்கள். முந்தைய கமிட்மென்ட்களால் தன்னை தொடர்பு கொள்ள முடியாததால் தெலுங்கு சினிமாவில் இருந்து தடை செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


 


மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் நடந்த சந்திப்பின் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். நிலுவை தொகையை செட்டில் செய்யாமல் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் யோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 


 






 


ரக்ஷனா திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் தன்னுடைய குழு தொடர்பு கொண்டு பேசுகையில் டிஜிட்டல் ப்ரோமோஷனில் பாயல் கலந்து கொள்வார் என்றும் அவருக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை திருப்பி தருமாறும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சமரசம் பேச மறுத்துள்ளனர். மேலும் பாயலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது பெயரை பயன்படுத்த மறுத்துள்ளனர் என தன்னுடைய பதிவின் மூலம் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை பாயல் ராஜ்புத்.