Idly Kadai: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி போன்று மென்மையான கதைக்களத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது.
தனுஷை தலைமேல் வைத்து கொண்டாடலாம்:
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன் படம் குறித்து கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். சிறு தொழில்களை கொண்டாடும் படமாக இதை பலரும் பாராட்டி வருகின்றனர். அறிவு கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘இட்லி கடை’யில் நானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்ததில் மகிழ்ச்சி. அஹிம்சை வெல்லும் என இன்று மகாத்மா காந்தி கூட ஒரு திரைப்படம் படம் எடுக்கத் தயங்குவார். காரணம் ரத்தம்தான் box office-ன் வண்ணமாகவே உள்ளது.
பூவிற்கு தன் வேரின் பெருமையை சொல்வது போல, பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோரையும் பூர்வீகத்தையும், குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தைம் விதமாய் செய்திருப்பது மெச்சத் தகுந்தது. கண்கலங்கியது பல இடங்களில். நண்பர் இளவரசு பாத்திரமாகவே பிரகாசித்தார்.இட்லியிலிருந்து வரும் ஆவி போல் ஜீவி இசையை ச்சுடச்சுட வழங்கியிருக்கிறார். தனுஷை தலை மேல் வைத்து கொண்டாடலாம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நட்சத்திர பட்டாளம்:
இட்லி கடை வைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் வந்த தனுஷிற்கும், சமையல் தொழில் அதிபர் அருண் விஜய்க்குமான போட்டியே படமாக அமைந்துள்ளது. இதில் குடும்பம்,பாசம், ஆக்ஷஜ் ஆகியவற்றை கதைக்களமாக அமைத்துள்ளனர். தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருடன் நித்யாமேனன், அருண்விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி, சமுத்திரக்கனி, இளவரசு, வடிவுக்கரசி, கீதா , பிரிகிடா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தை கொண்ட தனுஷ் இந்த படத்தை மென்மையான படமாகவே உருவாக்கியுள்ளார். ராஜ்கிரண் - தனுஷ் காட்சிகள் மிகவும் உருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சண்டையிடும் காந்தாரா?
இந்த படத்திற்கு போட்டியாக காந்தாரா பாகம் 1 வெளியாகிறது. காந்தாரா படத்தின் முந்தைய பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பான் இந்தியா படமான காந்தாரா படத்தை இட்லி கடை வீழ்த்துமா? என்பது அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்.