தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் அமீர்கான் உள்பட பல நடிகர்களுடனும் இணைந்தும், தனியாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையைக் காட்டினாலும் தற்போது பெரிய வாய்ப்புகள் ஏதுமின்றி இருக்கிறார் சித்தார்த். கைவசமாக இந்தியன் 2, மகா சமுத்திரம், சைத்தான் கே பச்சா ஆகிய படங்கள் மட்டுமே உள்ளன. 






திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த்,  ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ள எஸ்கேப் லைவ் என்ற வெப் சீரிஸில் தற்போது நடித்துள்ளார். இத்தொடர் மே 20ம்தேதி வெளியாகவுள்ளது. இந்த வெப்  சீரிஸுக்காக ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள சித்தார்த், தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். இப்போதெல்லாம் ஏன் இந்தி படங்களை விட்டு விலகிவிட்டீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''நான் ஒரு டெல்லி பையன் என்பதை பல நேரங்களில் மக்கள் மறந்துவிடுவார்கள். நான் ஹிந்தி பேசும் பையன், எனக்கு மொழி சரளமாக தெரியும். ஆனால், தென்னிந்திய சினிமாவில் நான் பல படங்கள் நடித்துள்ளேன். அதனால் எதாவது ஒரு சுவாரஸ்யம் என்றால் மட்டுமே இந்தி பக்கம் நான் செல்வேன்.வித்தியாசமாக ஏதாவது செய்யும் வரை, நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையே நடிப்பேன், இல்லையெனில் சினிமாவில் இருந்து விலகி வேறு வேலை செய்வேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார் 






2013-ஆம் ஆண்டுக்கு பிறகு உதயம் என்.எச்.4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துவிட்டார். இடையில் கம்மாரா சம்பவம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.