உலகச் சுகாதார நிறுவனம் உயர் ரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கிய நாள் இது. உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களிடமும் உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே அந்தப் பிரச்சாரத்தின் நோக்கம். அதற்காக, மே 17-ஆம் தேதியை உலக உயர் ரத்த அழுத்த நாள் (WHD) என உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன் படி, இன்று உலக உயர் ரத்த அழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘ரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்’ என்பதே உலக உயர் ரத்த அழுத்த நாளுக்கான இந்தாண்டின் கருதுகோள். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது ஒரு தீவிர பிரச்சனை. இந்த தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் உயர் ரத்த அழுத்த பிரச்சனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். BP என்பது எல்லோருக்கும் இருக்கிறது என்பதற்காக இது சாதாரணமானது அல்ல. பிபி உள்ளவர்கள் கவனமாகவும், மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் BP க்கு சைலண்ட் கில்லர் எனும் பெயரும் உண்டு.


BP பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடுவது மிகவும் ஆபத்தானது. இதனால் மாரடைப்பு, இதய செயலிழப்பு, அனியூரிசம், பக்கவாதம், நினைவாற்றல் பிரச்சனைகள், டிமென்ஷியா போன்றவற்றை ஏற்படுத்தும். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பது கடுமையான நோய்களின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முக்கியமான படியாகும்.


உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது. இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.



உலகில் 113 கோடி மக்கள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம். அதிலும், இந்த நோயை ஐந்தில் ஒருவர்தான் சரியாக கவனிக்கின்றனர் என்றும் மீதமுள்ளோர் கடும் அபாயத்தில் உள்ளதாகவும் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களிடம் சகஜமாக காணப்பட்ட இந்த நோய், தற்போது இளைஞர்களிடத்தில் கணிசமாக காணப்படுகிறது. குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 


கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, சுவாசிப்பதில் சிரமம், குறிப்பாக வேலை செய்யும் போது மூச்சுத் திணறல், மார்பு அசௌகரியம் மற்றும் எளிதில் சோர்வு போன்றவை உயர் இரத்த அழுத்தத்தின் சில பொதுவான அறிகுறிகள். இவற்றை நாம் எளிதாக நினைக்கக் கூடாது. உயர் இரத்த அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும்" என்கிறார் ஃபரிதாபாத்தில் உள்ள ஆசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் இன்டர்னல் மெடிசின் இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் புத்திராஜா.



ஜென் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் நாராயண் கட்கரின் கூற்றுப்படி, எளிதாக எண்ணி புறக்கணிக்கக் கூடாத உயர் இரத்த அழுத்தத்தின் சில எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே,



  1. மூக்கில் இரத்தம் கசிவு: சைனசிடிஸ் அல்லது தொடர்ந்து மூக்கை உறிஞ்சுவதால் மட்டும் மூக்கில் ரத்தம் வருவது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் கூட, மூக்கில் இருந்து ரத்தம் வரலாம். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

  2. தலைவலி: எப்போது பார்த்தாலும் தலைவலி இருந்து கொண்டே இருந்தால், உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு தலைவலி உள்ளது. இந்த தலைவலி உங்கள் மன அமைதியைத் குலைக்கும். எனவே, விழிப்புடன் இருந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறவும்.

  3. களைப்பு: உங்களால் அலுவலக வேலைகளையோ அல்லது வீட்டு வேலைகளையோ எளிதாகச் செய்ய முடியவில்லை என்றால், உயர் இரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். ஒன்றும் செய்யாத போதும் சோர்வாக உணர்கிறீர்களா? உடனடியாக மருத்துவரை அணுகவும்.

  4. மூச்சுத் திணறல்: இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இது உயர் இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

  5. மங்கலான பார்வை: உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால் பார்வையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால், ஒருவர் பார்வைக் கோளாறுகளை சந்திக்க நேரிடும். பார்வை மங்கலாகிவிடும் வாய்ப்புகள் உள்ளன.

  6. நெஞ்சு வலி: இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நெஞ்சு வலி ஏற்படுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டவுடன் உடனடியாக சிகிச்சை எடுக்க முயற்சிக்கவும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது எதிர்கால வாழ்க்கையில் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.