”இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ” என SPB  என்ன நினைத்து பாடினாரோ தெரியாது. அந்த வரிகள் இன்று உயிர்த்து போனது. கடந்த ஆண்டு இதே நாளில் எஸ்.பி.பி மறைவுச் செய்தி திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் உலுக்கியது. இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு ஓராண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. ரசிகர்கள், பாடகர்கள், இசை கலைஞர்கள் என பலரும் அவருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகி சுஜாதா SPB அவர்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். சுஜாதா முதன் முதலில்  எஸ்.பி.பியை பார்க்கும் பொழுது அவருக்கும்   எஸ்.பி.பி-யின் தங்கை சைலஜாவுக்கும்  ஒரே வயதாம். இருவரும் ஒன்றாகத்தான் தங்கள் இசை பயணத்தை தொடர்ந்தார்கள் என்பதால் , பாடகி சுஜாதாவையும் தனது சொந்த தங்கை போலவே பாவிப்பாராம்  எஸ்.பி.பி. தனது சிறுவயதில் முதன் முதாலாக யேசுதாஸ் அவர்களுடன் ஸ்டூடியோ ஒன்றில் பாட செல்லும்போதுதான் எஸ்.பி.பி அவர்களை முதன் முதலாக சந்தித்தாராம் சுஜாதா.




 எஸ்.பி.பி அவர்கள் ஒரு பாடலை விரைவில் கற்றுக்கொள்வாராம், அதனை கண்டு பலமுறை ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறாரார் சுஜாதா. அவர் விரைவாக பாடிவிடுவதால் அவரின் போஷனை முடித்த பிறகே சுஜாதா பாடுவாராம்.  எஸ்.பி.பி அவர்கள் பிஸியான பாடகர் என்பதால் அவரின் நேரத்தை வீணாக்க விரும்பாத சுஜாதா  எப்போதுமே  எஸ்.பி.பி அவர்கள் ஸ்டூடியோவில் பாடி முடித்த பின்னரே பாடலை பாடுவாராம். ஒரு முறை  எஸ்.பி.பி அவர்களும் சுஜாதா அவர்களும் ஸ்டூடியோவில் ஒரே சமயத்தில் இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்தார்களாம். அப்போது சுஜாதா சத்தமாக பாடி , பாடி ரிகர்சல் செய்துள்ளார்.உடனே சுஜாதாவின் ஸ்டூடியோவிற்குள் வந்த  எஸ்.பி.பி “இப்படி சத்தம் போட்டு பாடினால் , உனது சக்தி எல்லாம் போய்விடும், மனதிற்குள்ளாக பாடி பார், பின்னர் டேக்கில் உனது 100% கொடு ” என்றாராம். அந்த அறிவுரையை ஏற்ற பிறகு பாடல் மிக அருமையாக வந்ததாம். ஆனால் எப்படி இவரால் மட்டும் ஒரு நாளுக்கு 21 பாடல்கள் வரையிலும் ஒரு நாளில் பாட முடிகிறது என வியந்திருக்கிறார் சுஜாதா.




சக கலைஞர்களை மதிக்க தெரிந்தவர் என கூறுகிறார் சுஜாதா, அது நாமும் அறிந்ததுதானே! ஆனால் சக கால பாடகர்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை பாடகர்களையும் கூர்ந்து கவனித்து அவர்களையும் ஊக்கப்படுத்துவாராம்.  ஒரு முறை அமெரிக்கா சென்ற போது , எஸ்.பி.பி அவர்களும் சுஜாதா அவர்களும் ஒரே மேடையில் பாட திட்டமிடப்பட்டிருந்ததாம், ஆனால் சுஜாதாவிற்கு எதிர்பாராத விதமாக மஞ்சள் காமாலை மற்றும் நெஞ்சுப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எஸ்.பி.பி அவர்களோடு சேர்ந்து நன்றாக பாடி முடித்து கொடுத்தாராம். ஆனால் கைத்தட்டும் ஆடியன்ஸ் கூட தனக்கு மங்களாகத்தான் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு மோசமாக இருந்தேன். பிறகு ஒரு நாள் அந்த  வீடியோவை மறுபடியும் பார்க்க நேரிட்டது. அப்போது எஸ்.பி.பி அண்ணா அவர்கள் என் முதுகில் பாட்டு முடியும் வரை தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார். அதனால்தான் நான் சிறப்பாக பாட முடிந்திருக்கிறது. அவர் மற்றவர்களை காயப்படுத்தாதாவர், அவர் இப்போது நம்மை விட்டு பிரிந்திருந்தாலும், இசை மூலமாக முன்பை விட தற்போது அதிகமாக நம்மோடு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார் சுஜாதா.