மத்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   


இதன் காரணமாக, குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


 






இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய  வங்காள விரிகுடாவில் நேற்று உருவான காற்றழுத்தம், தற்போது நகர்ந்து, தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தமாக  தீவிரமடைந்துள்ளது.   




இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இது, மேலும் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இடையே நாளை மாலை கலிங்கப்பட்டனத்தில் நாளை (செப் - 26ம் தேதி)மாலை கடக்கும் எனத் தெரிகிறது  என்று தெரிவித்துள்ளது.   


மேலும், மேலடக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.