அன்றாடம் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் தெரியாமல் சில தவறுகளை செய்வார்கள். இதை தெரிந்து கொண்டு அதை சரி செய்து கொள்ள வேண்டும். சிலருக்கு இது தெரியாமல் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் போது இது எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.



  • நீர்சத்து குறைந்து போதல் - உடற் பயிற்சி செய்யும் போது உடலில் இருக்கும் தண்ணீர் சத்து வேர்வை மூலம் வெளியேறிவிடும். அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். உடற்பயிற்சி செய்யும் நாட்களில் குறைவாக தண்ணீர் குடிப்பது உடல் சோர்வை ஏற்படுத்தும்.





  • வார்ம் அப் தவிர்த்தல் - எந்த உடற்பயிற்சியை செய்யும் போதும் வார்ம் அப் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது உடல் பயிற்சி செய்வதற்கு எளிமையாக இருக்கும். மேலும் புதிய பயிற்சிகளை உடலுக்கு பழகுவதற்கும், உடலை தளர்வாக வைப்பதற்கும், இந்த பயிற்சிகள் உதவும்.





  • சீரற்ற உடற் பயிற்சி - ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டிய பயிற்சிகளை ஓரிரு நாளில் செய்து முடித்து விட்டு, மற்ற நாட்களில் ஓய்வு எடுப்பது தவறு. இது உடலை காயப்படுத்தும். இது போன்று விஷயங்களை தொடர்ந்து செய்ய கூடாது. தினம் ஒரு மணி நேரம் பயிற்சிகளை அந்தந்த நேரங்களில் செய்ய வேண்டும்.





  • அதிக எடை தூக்குதல் - உடற்பயிற்சி ஆரம்ப நிலையில் அதிகமான எடை தூக்கி பயிற்சி செய்தல். குறைவாக தூக்கி பழகி, கொஞ்சம் கொஞ்சமாக எடையை அதிகரிக்க வேண்டும். இதுவே சிறந்த பயிற்சியாகும். ஆரம்பத்தில் அதிக எடையை தூக்குவது, உடலை மேலும் காயப்படுத்தும். தசைகளில் வீக்கம் வலி, போன்ற பிரச்சனைகள் வரும்.





  • தவறான தோரணை - உடற் பயிற்சி செய்யும் போது உடலின் தோரணை பார்ப்பது அவசியம். தவறான தோரணையில் தொடர்ந்து உடற் பயிற்சி செய்வது உடலை மேலும் காயப்படுத்தி, உடற் பயிற்சிக்கு ஆன முழுமையான பயனை தராது.

  • பாதிப்புகளை கவனிக்காமல் இருத்தல் - உடலில் ஏதேனும் வலிகள் , காயங்கள் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும். நாளடைவில் கண்டுகொள்ளாமல் இருந்தால் இதுவே பின் விளைவுகளை ஏற்படுத்தும். வலிகள் இருந்தால் போதுமான ஓய்வு எடுத்து வலி சரியான பிறகு மீண்டும் உடற் பயிற்சி தொடங்கலாம்.


 


உடற்பயிற்சிகள் ஆரம்பித்து விட்டோம். அப்படியே செய்வோம் என்று இல்லாமல், இது போன்று தவறுகளை கண்காணித்து அவ்வப்போது சரி செய்து கொள்வது அவசியம். உடற்பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது முழுமையான வாழ்வியல் முறையாக இருக்கும்.