சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் மலேசிய அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கடந்த 13 ஆம் தேதி முதல் 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகின் 8 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒருமுறை மோதும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் ஜப்பான், எகிப்து, மலேசியா அணிகள் அரைஇறுதியை உறுதி செய்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று இந்திய அணி அரையிறுதியில் மலேசிய அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இந்திய அணி மலேசியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அபய் சிங், சவுரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகிய 3 பேரும் தோல்வியடைந்தனர்.சாய் ஹங் ஓங் 7-4, 5-7, 1-7, 7-1, 7-6 என்ற கணக்கில் அபய் சிங்கையும், அய்ரா அஸ்மான் 7-3, 7-3, 5-7 என்ற கணக்கில் ஜோஷ்னா சின்னப்பாவையும் வென்றனர். இதேபோல் டேரன் பிரகாசம் 7-5, 2-7, 7-6, 6-5 என்ற கணக்கில் சவுரவ் கோசலை வென்றார்.இதனால் அபார வெற்றி பெற்ற மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை அந்த அணி இறுதிப்போட்டியில் எகிப்து அணியுடன் மோதுகிறது.
இதனிடையே இந்திய அணி 3வது இடத்துக்கான வெண்கல பதக்கத்தை ஜப்பான் அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முன்னிலை பெற்ற இந்திய அணி அரையிறுதியில் தோற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.