இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கடந்த   ஜூன் மாதம் 16 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது.


படச்சுருக்கம்


14 ஆண்டுகளை வனத்தில் கழிக்கும் வனவாச காலத்தில், தங்க மான் மூலம் மாயத்தை பயன்படுத்தி சீதையை(கிருத்தி சனோன்) இலங்கைக்கு கடத்தி செல்கிறான் ராவணன்(சைஃப் அலி கான்) ஜடாயு எனும் கழுகு சீதையை மீட்க முயற்சி எடுக்கிறது. இருப்பினும் அந்த செயல் இராவணனிடம் பலிக்காமல் போய் விடுகிறது.


பின்னர் தனது முத்து மாலையை அடையாளத்திற்காக விட்டுச்செல்கிறாள் சீதை. அந்த முத்து வானரர்களிடம் சென்று அடைகிறது. மறுபக்கம் திக்கு தெரியாமல் விழிக்கும் ராமனுக்கு சுக்கிரீவனிடம் செல்ல வேண்டும் என்று சாப முக்தி பெறும் பெண் ஒருவள் சொல்கிறாள். இதை வைத்து ராமன் ஹனுமனை சந்தித்து, சீதையை மீட்பதே கதை. இதன் கதை ஊருக்கே தெரிந்திருந்தாலும், ஓம் ராவத்தின் பார்வையில் சற்று வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கும் கதையே ஆதி புருஷ்.


முதல் நாள் வசூல்


மாபெரும் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். சுமார் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதலாக திரையரங்குகளில் அனுமனுக்கு மட்டும் தனியாக சீட்கள் ஒதுக்கப்படும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது. மேலும் ஆதிபுருஷ் படத்திற்கான 10.000 டிக்கெட்களை இலவசமாக வழங்கினார் படத்தின் தயாரிப்பாளர்.  இத்தனை பொருட்செல்வுகள் செய்து வெளியிடப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம்  மாபெரும் வசூல் சாதனையைப் படைக்கும் என படக்குழுவினருக்கு இருந்த நம்பிக்கையையே காட்டுகிறது.  நேற்று வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதைப் பார்க்கலாம்.


முதல் நாளில் இந்தியா முழுவதிலும் சுமார் 86. 75 கோடி வசூல் செய்துள்ளது ஆதிபுருஷ் திரைப்படம்..


அதே நேரத்தில் உலகம் முழுவதும்  140  கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வத் தகவல் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது  .






கடும் விமர்சனங்கள் படத்தின் மீது இருந்து வந்தாலும் ரசிகர்களிடையே படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகம் இருந்துள்ளதை இந்த முதல் நாள் வசூலை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழ், மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒப்பீட்டளவில் சற்று சுமாரான ஓப்பனிங்கே  அமைந்துள்ளது. அடுத்து வரக்கூடிய வாரங்களில் முதல் நாள் வசூலைப்போல்  தக்கவைத்துக்கொள்ளுமா ஆதிபுருஷ் திரைப்படம்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.