‘லொள்ளு சபா’ ஷோ இன்றைய காமெடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ‘தகப்பன் சாமி’ என்று சொல்லலாம். 90 ஸ் கிட்ஸின் பாவரிட் நிகழ்ச்சி. சினிமாவை கலாய்த்து அதான் வாயிலாக சினிமாவில் நுழைந்து பிரபலமாக மாறியவர்கள் இந்த கூட்டம். சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், மனோகர், பாலாஜி என சொல்லிகொண்டே செல்லலாம். முதன் முதலில், மறைந்த நடிகர் பாலாஜி லொள்ளு சபாவில் ஹீரோவாக நடிக்க, பிறகு சந்தானம் வந்து நிகழ்ச்சியை உச்சிக்கு கொண்டுச் சென்றது நமக்கு தெரிந்ததே. ஒருகட்டத்திற்கு மேல் அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட, ரசிகர்கள் இன்றளவும் யூடியூப் வாயிலாகவும், சமூக தளங்கள் வாயிலாகவும் பழைய கிளிப்பிங்ஸ்களை பார்த்து ரசித்து வருகின்றனர். மீம்ஸ்-களிலும் லொள்ளு சபா டெம்ப்ளேட் இடம்பெறாமல் இல்லை. இவர்களில் சேஷு இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். ‘திரௌபதி’ படத்தில் சேஷு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவரும் இவர், இந்த கொரோனா காலகட்டத்தில் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வந்ததை கண்டிருப்போம். 



அவர் பேசுகையில், "விமல் ரொம்ப வருஷ பழக்கம், அப்போ அவன் பேரு ரமேஷ். நெறைய சீரியல்ல ஒண்ணா நடிச்சுருக்கோம். ரொம்ப நல்ல உழைப்பாளி, நேர்மையான பையன். ரொம்ப மரியாதையா இருப்பான். குழந்தைங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்ச முகம் அவனுக்கு. இடையில சின்ன சின்ன தவறுகள் எல்லாம் நடந்துடுச்சு. ஆனா அதெல்லாம் வளர்ற நேரத்துல நடக்குறதுதான். முன்னாடி ஒருநாள் நான் நடிச்ச ஒரு படத்துக்கு டப்பிங் பேச போயிட்ருக்கேன், ஒரு கார் வந்து நின்னுச்சு. யாருன்னு பாத்தா உள்ள விமல், இறங்கி வந்து பேசுனான். என்னப்பா என்ன படம் போயிட்ருக்குன்னு கேட்டேன். ஒரு படம் வந்துருக்குன்னு சொன்னான். பரவல்லையே எப்படி ஹீரோ ஃபிரெண்டா, நல்ல ரோலான்னு கேட்டேன். இல்லண்ணே நான்தான் ஹீரோ என்றான். ரொம்ப சந்தோஷம்பான்னு கட்டிப்பிடிச்சு வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லிட்டு என்ன படம்ன்னு கேட்டா, பசங்கனு ஒரு படம்ன்னு சொல்றான். ஆமாம்டா நல்ல டாக் இருக்கு டா அடுத்து என்ன பன்றன்னு கேட்டேன், களவாணின்னு சற்குணம் படம் ஒன்னுன்னு சொன்னான். எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்குறேன், நண்பன் சதீஷ் வர்றான். அவன் வந்து அண்ணன் படம் பன்றேன், டைரக்டர் ஆகிட்டேன், ஆபிஸ் போட்ருக்கேன் வந்திருங்கன்னு பைக்லனு வந்து சொல்லிட்டு போறான். பக்கத்துல இருந்தவன்கிட்ட, தம்பி ஒரு ரெண்டு ரூபாய்க்கு விஷம் இருந்தா வாங்கிட்டு வாடா, அவன் என்னடான்னா ஹீரோன்னு சொல்றான், இவன் டைரக்டர்ன்னு சொல்றான், நான் எதுக்குடா இருக்கேன்னு கேக்குறேன், சிரிக்கிறான் விழுந்து விழுந்து." என்று கூறினார். 



நடிகர் விமல் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல வெற்றியடைந்த படங்களில் அவர் நடித்திருந்தார். இதனிடையே சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படமும் வரவேற்பை பெறவில்லை. ஆனால் விமல் நடிப்பில் வெளியாகியுள்ள விலங்கு வெப் சீரிஸ் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பை பெற்றது. சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ள அந்த வெப் சீரிஸ் குறித்து தான் கடந்த சில நாட்களாக பலரும் பேசிவருகின்றனர். நடிகர் விமலுக்கு 'விலங்கு' தொடர் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனையடுத்து நடிகர் விமல் நடிக்கும் படங்களுக்கு திரையுலகில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.