தமிழ் சினிமாவில் வில்லனா நடிக்கிறது தான் ஆசை ,ஆனால் ராட்சசன் படத்திற்குப் பிறகு எமோசனல் ரோல் தான் எனக்கு வருகிறது என வேதனையுடன் மனம் திறக்கிறார் நடிகர் முனிஸ்காந்த்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் சென்னையை நோக்கி வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் ராமதாஸ் என்ற முனிஸ்காந்த். கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர், சிறு வேடங்களில் நடித்துவந்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை கூலி வேலை, கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் வேலை போன்ற பல பணிகளை மேற்கொண்டேன். எந்த நேரத்திலும் சினிமா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த பணியில் இருந்தது தான் தனக்கு உதவியாக இருந்தது என சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதோடு தமிழ் திரைப்படைத்துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் தனது நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றிப்படைப்பான முண்டாசுப்பட்டி குறும்படத்தின் முனிஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தார். இதன் பிறகே இவர் முனிஷ்காந்த் ராமதாஸ் என அழைக்கப்பட்டார். இதனையடுத்து கடல், சூது கவ்வும், பீட்டா 2 , வில்லா, பசங்க 2, 144, மாநகரம், மரகத நாணயம், ராட்சசன் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் பேட்டியில் சம்பளத்த வாங்கிட்டு எப்போதும் நடிக்க மாட்டேன் என்றும் விரும்பித்தான் எப்போதும் செல்வேன் என்றும் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தனது வேலைகளைச்செய்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ராட்சசன் படத்திற்கு பிறகு எனக்கு எப்பவும் எமோசனல் கேரக்டர் தான் வருகிறது எனவும் ஆனால் எனக்கு வில்லன் கேரக்டரில் நடிக்கிறது தான் ஆசை என தெரிவித்துள்ளார். நாசர் தான் என்னோட ரோல் மாடல் அவரைப்போன்று நடிக்கத் தான் எப்போதும் ஆசைப்பட்டேன் ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நிச்சயம் அதற்காகக் காத்திருப்பேன் என்றார்.
மேலும் என்னோட மனைவிக்கு சந்தானம் சார் ரெம்ப பிடிக்கும் என்பதால், அவர் சும்மா வந்து நின்னாலே பயங்கரமாக சிரிச்சு என்ன வெறுப்பேத்துவார் எனவும், உங்களுக்கு காமெடி ரோல் செட் ஆகல ராட்சசன் படத்துல வர மாதிரி எமோசனல் கேரக்டர் தான் நல்லா இருக்கு என்று அவரும் கூறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இதோடு “என்னுடைய வாழ்க்கையை சீரழிக்க விக்கப்பீடியா முயன்றது எனவும், அதில் தனக்கு 56 வயது எனக் குறிபிட்டிருந்ததால் திருமணத்தில் பிரச்சனை“ ஏற்பட்டது. இதனையடுத்து திருமணத்திற்கு முன்னதாக என் மனைவி, உங்களுக்கு 56 வயதா? எனக்கேட்டவுடன், என்னுடைய அனைத்து கல்விச்சான்றிதழை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்.
ரஜினியுடன் திரைப்பயணம்:
பேட்ட படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு நல்ல அனுபவம் என்றும், அவரைப் பார்த்தவுடனே எனக்கு நடிக்க பயமா இருந்தது. விசில் அடித்து அவரை அழைப்பது போன்ற காட்சியை என்னால் நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் நான் ரஜினி சாருக்கு தீவிர ரசிகர் என்றும் அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் என்ன செய்வது? என்ற குழப்பத்தில் இருந்ததால் அவருடன் நடிக்கவே பயம் என்றும் அவரிடம் சரியாக பேசக்கூட முடியவில்லை என பேட்டியில் முனிஸ்காந்த் தெரிவித்துள்ளார்.