ரட்சகன் திரைப்படம் நாகார்ஜுனாவுக்கு ஒரு மைல்கல். அப்படி ஒரு ஹிட்டை தந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரவீன் காந்தி. இவர் ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல், புலிப்பார்வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய சில படங்களில் நடிக்கவும் செய்வார். இந்நிலையில் தன்னுடைய திரை அனுபவம் குறித்தும், தமிழ் சினிமாத்துறை குறித்தும் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேசியுள்ளார். அதில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். திரையுலகில் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு பிறகு நிறைய இயக்குநர்களை உருவாக்கிய வெகு சிலரில் இவரும் ஒருவர். இவர் அசிஸ்டண்ட்டாக இருந்தவர்கள் தற்போது சினிமாவில் பெரும் இயக்குநர்களாக உள்ளனர். அதில் ஒருவர்தான் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். ஏ. ஆர். முருகதாஸ் தன்னுடைய கெரியரை துணை இயக்குநராக ரட்சகன் படத்தில் இயக்குனர் பிரவீன் காந்தி மற்றும் குஷி படத்தில் எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் துவங்கினார்.


அதன் பிறகு 2001-ஆம் ஆண்டில் அஜித்தின் தீனா படத்தின் மூலமாக இயக்குனராக களமிறங்கினார். அதற்குப் பிறகு படத்துக்கு படம் அவரது கெரியர் க்ராப் உயர்ந்து கொண்டேபோனது. தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து தற்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறார் அவர். அவருக்கு எப்படி தீனா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது என்று இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகிறார்.



அவரது அசிஸ்டண்ட்கள் பற்றி கேட்ட கேள்வியின்போது, "ஏ.ஆர்.முருகதாஸும் எஸ்.ஜே.சூர்யாவும் ரட்சகன் படத்துல மட்டும் தான் என் கிட்ட வேலை செஞ்சாங்க. இப்போ சமீபத்துல ஷக்தி சவுந்தரராஜன் என்னோட அசிஸ்டண்ட்தான், எங்கேயும் எப்போதும் சரவணன் என்னோட அசிஸ்டண்ட்தான். எஸ்.ஜே.சூர்யா கொஞ்ச நாள் தான் இருந்தாரு, அதுக்குள்ள அஜித்க்கு கதை ஓகே ஆயிடுச்சு, வாலி பண்ண போயிட்டாரு. எஸ்.ஜே.சூர்யா ஒரு கடின உழைப்பாளி, எதையும் கேக்க தயங்க மாட்டாரு…" என்று பேசுகையில், அஜித் படம் டிராப் ஆனது குறித்து கேட்டபோது. "ஸ்டார் தான் அஜித் நடிக்க வேண்டிய படம்… ஏழாம் தேதி ஷூட்டிங், மூன்றாம் தேதி அந்த திரைப்படத்தின் கேமரா மேன் என்ன பத்தி தப்பா அஜித் கிட்ட சொல்லிருக்கார், நான் ரொம்ப டாமினெட்டிவா இருப்பேன் ன்னு சொல்லிருக்கார். ஆனால் அவருக்கு கொஞ்சம் அவர் விருப்பம்போல மாற்றங்கள் தேவைப்பட்டிருக்கு, அஜித் அதை என் கிட்ட கேட்காமலே நம்பிவிட்டார். படம் கை மாறிடுச்சு…


ஏழாம் தேதி மச்சினியே மச்சி மச்சினியே பாட்டு பிளான் பண்ணிருந்தோம், நக்மா, ஜோதிகா அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஹீரோயினா வச்சு பிளான் பண்ணது. அந்த டேட் அப்படியே "வத்திக்குச்சி பத்திக்காதுடா" ஷூட்டா மாறிடுச்சு. நான் போயி அஜித் கிட்ட பேசிருந்தா மாறியிருக்கலாம், ஆனா அது யார் டைரக்டர்ன்னு கேட்டேன் ஏ. ஆர். முருகதாஸுன்னு சொன்னாங்க. நான் அதுக்கப்புறம் போய் கேக்கல. என் அசிஸ்டண்ட்தானே பண்றாரு, அவருக்குதான சான்ஸ் கிடைக்குது பண்ணட்டும்னு விட்டுட்டேன். அதுக்கப்புறம் நான் கண்டுக்கல அதை…" என்றார். 



அஜித், சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 'தீனா' படத்தில்தான் அஜித்துக்கு 'தல' என்ற பெயர் வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 'தல' என்றுதான் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அந்த பெயருக்காக உருவாகும் சண்டைகளை குறைப்பதற்காக சமீபத்தில் அந்த தலைப்பை துறந்த அஜித், தற்போது ஏகே என்று அழைக்கப்பட்டு வருகிறார். எனினும் அந்த பெயர் ரசிகர்களின் மனதில் ஆழமாக ஒட்டிக்கொண்டதால் இன்னமும் சிலர் அவரை தல என்று அழைத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அப்படி ஒரு பெயரை பெற்றுத்தந்த அந்தப் படத்துக்குப் பிறகு பலமுறை அஜித் படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று செய்திகள் வெளியானாலும், அது நடைபெறவே இல்லை என்பது சோகமே.


அதன் பிறகு ஸ்டார் படம் உருவானது குறித்து, "அப்போது பிரஷாந்த்துடன் ஏற்கனவே சண்டை… இவர்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் மறுபடி ஸ்டார் படத்த பண்ணலாமான்னு தியாகராஜன கூப்பிட்டு கேட்டேன், சரின்னு சொன்னார், பண்ணோம். நான் நினைத்திருந்தால் அஜித் கிட்ட பேசி பண்ணிருக்கலாம், எனக்கு அஜித் கேரக்டர் நல்லா தெரியும், ஆனா பண்ணல…" என்றார். ஸ்டார் திரைப்படம் பிரஷாந்த், ஜோதிகா, மும்தாஜ், ரமேஷ் கண்ணா நடிப்பில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.