தமிழ் சினிமாவில்’ மின்னலே ’திரைப்படத்தின் மூலமாக தடம் பதித்தவர் இயக்குநர் ஹாரிஸ் ஜெயராஜ் . ஒரு படம் என எடுத்துக்கொண்டால் , அதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் அனைத்து பாடல்களுமே ஹிட்டாகத்தான் இருக்கும் . அந்த அளவிற்கு வித்தியாசமாகவும் , எக்காலத்து இளைஞர்களும் விரும்பும் படியாகவும் இருக்கும் இவரது பாடல்கள். தமிழில் சாமுராய் , தாம் தூம் , லேசா லேசா, சாமி , கோவில் , காக்க காக்க , செல்லமே, அருள், கஜினி, வேட்டையாடு விளையாடு, மாற்றான், துப்பாக்கி, துருவ நட்சத்திரம் என இவர் ஹிட் லிஸ்டை அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பளர் என்ற தமிழக அரசின் விருதும் ஹாரிஸ் ஜெயராஜிற்கு கிடைத்தது. இந்த நிலையில் தான் இசையமைக்கும் விதம் குறித்தும் , தான் எந்த படத்திற்கு இசையமைக்க பயந்தேன் என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.




”பாடலுக்கு வரிகள் ரொம்ப முக்கியம்” :



”இயக்குநர்களுக்கு டியூன் நல்லா இருந்தா போதும். ஆனால் அதையும் தாண்டி எனக்கென ஒரு திருப்தி வேண்டும். அப்படித்தான் நான் இசையமைப்பேன்.  பாடல் வரிகள் , பாடகர், இசை என அனைத்திலுமே நான் கவனம் செலுத்துவேன். ஒரு பாடலை பல விதங்களில் பண்ணலாம் . ஆனால் சுவை அறிந்து பண்ண வேண்டும் . இல்லையென்றால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். பாட்டுடைய ஜீவனே அதனுடைய வரிகள்தான். சின்ன வயதில் எனக்கு வரிகள் மீதெல்லாம் ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால் சில பாடலாசிரியர்களுடன் வேலை பார்த்த பிறகுதான். அட எவ்வளவு மெனக்கெடல்கள் இருக்கிறது என தோணுச்சு. நான் படத்தின் கதை கேட்பேன் . காரணம் அந்த படம் நல்லாருக்குமா இல்லையா என்பதற்கல்ல. கதையை தீர்மானிக்க நான் யார், படத்தில் எனக்கான ஸ்கோப் எவ்வளவு இருக்கிறது என்பதைத்தான் நான் பார்ப்பேன்.மின்னலே படம் வந்த பிறகு நான் அதை பார்க்கவே இல்லை.” என்றார் ஹாரிஸ்







”இந்த பாடலுக்கு இசையமைக்க பயந்தேன்” :


மேலும் பேசிய அவர் “ பொதுவாகவே நான் இசையமைக்கும் படங்களின் பாடல்களை வெளியாகும் சமயங்களில் பார்ப்பதோடு சரி, அதன் பிறகு பார்க்க மாட்டேன். டிவில வந்தா கூட பார்க்க மாட்டேன். இயக்குநர் ஜீவா கூட நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். அவரைப்போல ஒரு ஜானர் பண்ண இன்னும் ஆட்கள் இல்லை. தாம் தூம்தான் அவரோடு பண்ண கடைசி படம், அவர் நான் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்துடுறேன். பிறகு சாங்ஸ் பார்க்கலாம் என்றார். நானும் சரின்னு சொல்லியிருந்தேன் . அதன் பிறகு அவர் வரவே இல்லை. ‘அன்பே...என் அன்பே’  பாடல் அவர் இல்லாமல் நானாகத்தான் இசையமைத்தேன். அவர் இல்லாமல் இசையமைக்க ரொம்ப பயமா இருந்துச்சு” என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்.