இந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறியதாக அவரது நண்பர் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்வுகளில் ஒன்றான குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான் நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்த ராஜராஜ சோழன் பற்றிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது.
வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் பார்த்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலிடம் ராஜராஜசோழனை இந்து மதம் சார்ந்தவரா சித்தரிக்கிறதா இயக்குநர் வெற்றிமாறன் சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது என்றும், வைணவம், சைவம், சமணம் என இருந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும் மதங்கள் வெவ்வேறு இருந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில் அதையெல்லாம் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார். இதெல்லாம் சரித்திரம். ஆனால் இங்க அதெல்லாம் தேவையில்லை. இது சரித்திர புனைவு பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம் என கூறினார். கமலின் இந்த கருத்து கடும் எதிர்ப்புகளைப் பெற்றது. நடிகை கஸ்தூரி வெளியிட்ட ட்வீட்டில் அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்கிறார் என வெளிப்படையாக கூறினார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் வெளியான தகவலின்படி, கமலின் நண்பரும்,எழுத்தாளருமான பி.ஏ.கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அதில் ராஜமுந்திரி என்ற இடம் 10 ஆம் நூற்றாண்டில் இல்லை. அது ராஜமகேந்திரவரம் என அழைக்கப்பட்டது. அது போலத்தான் இந்து மதம் பற்றி நான் சொன்ன கருத்தும். ராஜராஜ சோழன் காலத்தில் சிவனை வழிபட்டவர்கள் சைவர் என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் வைணவர் என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மறுக்க முடியாத உண்மையைத் தான் கூறினேன். நான் இந்து மதம் இருப்பதை மறுக்கவில்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.