Seeman About 'Malli Poo Song:   சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனம் ஈர்த்த திரைபடம் ‘ வெந்து தணிந்தது காடு ‘ .இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள மல்லிப் பூ  பாடல் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. இப்பாடல் இதுவரை 40 மில்லியன்க்கும் அதிகமான முறை யுடூபில் பார்க்கப்பட்டுள்ளது. இப்பாடலை,  கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கம், வலியை சொல்வதாக  ’மல்லிப் பூ’ பாடல் இருப்பதாக  மனம் திறந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  பாராட்டியுள்ளார். 


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் வாக்கு அரசியலுக்கு வருவதற்கு முன்னர் திரைப்படத் துரையில் இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்பட்டவர். தீவிர அரசியலில் செயல்பட்டு வந்தாலும் திரைப்படங்களில் நடிப்பது, சிறப்பு தோற்றங்களில் நடித்து சினிமாவிலும் செயல்பட்டு வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநரும் நடிகருமான அமீருடன் இணைந்து படத்தில் நடிக்கப்போவதாக அமீர் கூறியிருந்தார். 






மல்லிப் பூ பாடலை பாராட்டி சீமான் கூறியிருப்பதாவது, என்னுடைய அன்புத்தம்பி சிம்பு  அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப் பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 






அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்! அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ்  அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!” இவ்வாறு சீமான் மல்லிப் பூ பாடல் குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.