ராஜமவுலி இயக்கத்தில் சுதீப், சமந்தா நடித்த 'நான் ஈ' படத்தில் சமந்தாவின் காதலனாக நடித்தவர் நானி. தற்போது அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘வி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் ‘டக் ஜெகதீஷ்’ படம் உருவாகியுள்ளது. சிவா நிர்வணா இயக்கியுள்ள இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டக் ஜெகதீஷ் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் செப்டம்பர் 10-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் ஓடிடியில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் தெலங்கானா தியேட்டர் உரிமையாளர்கள் பலர் நானிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதன்பின் அதற்கு வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நானி, “நானும் தியேட்டர்காரர்களில் ஒரு அங்கம்தான், எனக்கும் அவர்கள் பிரச்சனை தெரியும். சூழ்நிலைகள் சரியாக இல்லாமல், எதிர்காலத்தில் தியேட்டர்களில் வெளியிட வாய்ப்புகள் வந்தாலும், என் படத்தை நான் ஓடிடி தளங்களில் வெளியிடும் முடிவை எடுப்பேன். மற்றவர்கள் எனக்குத் தடை போடுவதற்கு முன்பே எனக்கு நானே தடை போட்டுக் கொள்வேன். இந்த விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் என்னை வெளியாள் போல நினைத்துவிட்டார்கள்” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நீண்ட காலம் தங்கள் படங்களை வெளியிட முடியாமல் தவிக்கும் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிடைக்கும்போது அப்படங்களை ஓடிடி தளங்களுக்கு விற்று விடுகிறார்கள். இது சம்பந்தமான பிரச்சனைகள் தற்போது தெலுங்கு சினிமா உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையை நாணி லாவகமாக கையாண்டுள்ளார்.
அவர் தற்போது டக் ஜெகதீஷ், ஷ்யாம் சின்கா ராய், அண்டே சுந்தரானிகி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் 'டக் ஜெகதீஷ்' திரைப்படம் அனைத்துக்கட்ட பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. நானி ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டவை. தற்போது நானி 'மீட் க்யூட்' என்ற ஆந்தாலஜியைத் தயாரித்து வருகிறார். 5 கதைகள் கொண்ட ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார்.