அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை தொடர நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  


கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான் சற்றுமுன் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மனோஜ்  நீதிமன்றத்திற்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் குன்னூர் கிளை சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். 


தடயவியல் நிபுணர் மற்றும் கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகிய மூவரும் இன்று புதிதாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இன்று விசாரணைக்கு  அழைத்து வரப்படவில்லை. காவல் துறையினர் சம்மன் அனுப்பாததால் விசாரணைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.   


மேலும், கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், கூடுதல் விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை தொடர உச்சநீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. 


யாரையும் விசாரிக்கலாம்:  கோடாநாடு வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று யாரையும் விசாரிக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   


புது விசாரணை குழு: இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க கூடுதல் டிஎஸ்பி தலைமையில், புதிய விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த, கோடநாடு தொடர்பான விசாரணையை இந்தக் குழு இனி தீவிரமாக மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


கோடநாடு வழக்கு கடந்து வந்த பாதை  


சயானிடம் 3 மணி நேரம் விசாரணை: முன்னதாக, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணிநேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 24-ஆம் தேதி விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர். இதனையொட்டி, வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. 


இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி  கோடநாடு வழக்கு விசாரணை தொடர்பான வழக்கு  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சயன், தனபால் ஆகியோரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணைக்கு பின் நடைபெறும், முதல் நீதிமன்ற விசாரணை என்பதால் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சயன் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும், கூடுதல் நபர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது


விசாரணையின் போது அனுபப் ரவி என்ற சாட்சி தரப்பு வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, விசாரணை நடைபெறக்கூடாது என வாதாடினார். அப்போது குற்றவாளிகல் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் வழக்கிற்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இங்கு வாதம் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.  இதனால் வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் ரவுடிகள் போல பேசக்கூடாது எனக் கூறியதால், வாதம் முற்றியது. இதையடுத்து நீதிபதி சஞ்சய் பாபா குறுக்கீட்டு, வெளியில் பேசுவது  போல நீதிமன்றத்தில் பேசக்கூடாது. நீதிமன்றத்திற்கு ஒரு மாண்பு உள்ளது எனக்கூறி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.


கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 2 ம் தேதி (இன்று)  நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார். 


என் போன் எங்கே?  கடந்த 27ம் தேதி வழக்கு விசாரணை முடிந்த பின் வெளியே வந்த சயன், அங்கிருந்த டிஎஸ்பி. சுரேஷிடம், விசாரணையின் போது தன்னிடம் இருந்த பெறப்பட்ட ஐபோன் உள்ளிட்ட 3 போன்களை தருமாறு கேட்டார். ஆனால் போலீசார் அதற்கு ஒருவரை ஒருவர் பார்த்தனர். போன் யாரிடம் இருந்தது என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. இதை கண்டு எரிச்சலான சயன், ‛எனது போனை கொடுங்கள்..’ கடுப்பானார். ‛நீதிமன்றத்திலும் அதை ஆஜர்படுத்தவில்லை... என்னிடமும் தரவில்லை... வேறு எங்கு தான் வைத்திருக்கிறீர்கள்,’ என சயன் கேட்க, போலீசார் பதில் சொல்ல முடியாமல் நின்றனர். ஒரு கட்டத்தில் செல்போன் கோரிக்கை, வாக்குவாதமாக மாறியது. பின்னர் செப்டம்பர் 2 ம் தேதி செல்போன்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனில், செல்போன்கள் தொடர்பாக நீதிபதியிடம் முறையிட உள்ளதாக சயன் கூறிச் சென்றார். 


செல்போன் விசாரணை அதிகாரியிடம் இருப்பதாக சயானிடம் காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.இதனியடுத்து, சயான் தனது செல்போன் குறித்து நீதிபதியிடம் எந்த  முறையிடும் செய்யவில்லை.