விழுப்புரம் ஆட்சியர் மோகன் இன்று அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்சியர் வளாகப் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், கையில் செருப்பு அணிந்தவாறு மாற்றுத்திறனாளி ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த ஆட்சியர் மோகன், உடனே காரில் இருந்து கீழே இறங்கி அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மாற்றுத்திறனாளி நெற்குணத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) என்பது தெரியவந்தது.




பின்னர் அவர் ஆட்சியரிடம் கூறுகையில், பிறந்து 8 மாதத்தில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. தற்போது துணி தைக்கும் வேலை செய்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய மூன்று சக்கர சைக்கிள் உடைந்து, சேதமாகிவிட்டது. இதனால், புதிய சைக்கிள் வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என்று முனியப்பன் தெரிவித்தார். உடனே, மாற்றுத்திறனாளி நல அலுவலரைத் தொடர்புகொண்ட ஆட்சியர், சம்பவ இடத்திற்கு மூன்று சக்கர சைக்கிளை வரவழைத்து அவருக்கு வழங்கினார். 10 ஆண்டு காலக் கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியருக்கு, முனியப்பன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.




விழுப்புரத்தில்  மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து காலை வேளைகளில் நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டவர், கடந்த சில நாட்களாக கிராமப்புறங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து முடிந்த அளவுக்கு அங்கேயே சான்று வழங்கி வருகிறார். மேலும், வாட்ஸ் அப் மூலமும் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரித்ததன் அடிப்படையில், பள்ளி மாணவி ஒருவருக்கு டிஜிட்டல் சாதிச்சான்றை வழங்கினார். அண்மையில், மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட காட்டு சிவிறி கிராமத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து, திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் வாழும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.




கடந்த 1997-1998 ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் ஆட்சியராக பதவி வகித்த அதுல்ய மிஸ்ரா மக்களை நோக்கித்தான் அரசாங்கம் செல்ல வேண்டும். அதற்காக நான் மக்களை நோக்கி பயணிக்க போகிறேன் என்று அறிவித்தார். இதை 'மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்' என தலைப்பிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சுமார் 12 நாட்கள் கிராமங்களில் நடந்து சென்று மக்களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பது, மேலும் இரவாகிவிட்டால் அங்கேயே ஒருவர் வீட்டில் தங்கி அடுத்த கிராமத்துக்கு செல்வது என திட்டமிட்டு செயல்படுத்தினார்.




இது குறித்து, ஆட்சியர் மோகனிடம் கேட்டபோது,  காலை 10 மணிக்கு அலுவலகம் வரும் முன்பு நாள்தோறும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்கிறேன். நேரில் செல்லும் போது தான் தற்போதைய நிலை தெரியவருகிறது. நடைபயிற்சி செல்லும் அதே சமயத்தில் மக்களை நேரடியாக சந்தித்தது அவர்களின் குறைகளையும் கேட்க முடிகிறது. இம்மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்புவகித்த அதுல்ய மிஸ்ரா இப்படி செய்துள்ளார் என்ற தகவல் மேலும் எனக்கு ஊக்கமளிக்கிறது. பொறுப்பு கூடியுள்ளது என்றார். "மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்" விழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு திரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது