தை பொங்கல் வந்து விட்டாலே தமிழ் நாட்டின் தலைப்புச் செய்தியாகவும் தமிழ் குறித்த செய்திகளில் முக்கியமானதாக இருப்பது ஜல்லிக்கட்டு. ஆக்ரோசமாக வாடி வாசலில் இருந்து வெளியே வரும் காளை மாடுகளை ஆரவாரம் பொங்க காளையர்கள் பிடிப்பது ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை முக்கிய பிரமுகர்கள் வருவது வழக்கம்.


தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ் பெற்றவை. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி என்பது அதிகப்படியான மக்களால் எதிர்ப்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. 


இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி அமைச்சர் உதயநிதி அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இதில் தகுதியுள்ள 1,200 காளைகளுக்கும், 800 வீரர்கள் களமிறங்க அனுமதிக்கப்பட்டனர். 


இந்நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு திரை பிரபலங்கள் வந்தனர்.  இதில் பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி,  இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட வந்திருந்தார். இவரை அனுகிய செய்தியாளர்களிடம் அவர் பேசியது தற்போது திரையுலகில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் அவர், “ இது நம்ம ஊர் மதுரை.  நான் பிறந்து ஆளான ஊர். உலகத்திலேயே மிக முக்கியமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்  நான் பங்கேற்றுள்ளேன். காளையா? மாடுபிடி வீரனா? என போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  விடுதலை படத்தின் இராண்டாம் பாகத்திற்குப்  பின் ஜல்லிக்கட்டை மைய்யப்படுத்திய படத்தில்  நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக  நடிப்பேன். ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை என்பதால் நமது மதுரையிலேயே நடிப்பேன்” என நடிகர் சூரி தெரிவித்தார். நடிகர் சூரியின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகின்றது. இது மட்டும் இல்லாமல் நேற்று நடிகர் அருண் விஜய், “ எனக்கு ஜல்லிக்கட்டு போட்டியை மைய்யப்படுத்திய கதையில் ஒரு மாடுபிடி வீரனாக நடிக்க ஆசைப்படுகின்றேன். டூப் வைத்து நடிக்க எனக்கும் ஆர்வம் இல்லை. மேலும் இதில் எவ்வளவு சிரமமும் ஆபத்தும் உள்ளது என எனக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமா பிரபலங்கள் இப்படி தங்களது விருப்பத்தினை தெரிவித்துவரும் நிலையில், இதற்கு முன்னர், இயக்குநர் வெற்றி மாறனின் “ வாடிவாசல்” படத்தில் நடிக்க நடிகர் சூர்யா பல மாதங்களாக ஒரு மாட்டினை தனது வீட்டில் தானே நேரடியாக வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டினை மையப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.