ஐபொம்மா மற்றும் பப்பம் ஆகிய இணையதளங்களின் வழியாக பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த கும்பலின் தலைவனை ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. இந்த கும்பலின் தலைவன் ரவி இமாண்டி உட்பட மேலும் ஐந்து நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கடந்த ஜூன் மாதம் நானி நடித்த ஹிட் திரைப்படம் வெளியான அதே நாளில் இணைய தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த குபேரா திரைப்படமும் வெளியான அதே நாளில் இணையத்தில் கசிந்தது. சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியாவதை தடுக்க தெலுங்கு திரைப்பட வனிக சங்கம் வழக்குபதிவு செய்ததுடன் விசாரணைத் தொடங்கியது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் திரைப்படங்களை சட்டவிரோதமாக டெலிகிராம் உட்பட பல்வேறு செயலிகள் மூலம் விநியோகம் செய்த குற்றத்திற்காக ஐந்து நபர்களை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது.
கைதான 5 நபர்கள்
பீகாரைச் சேர்ந்த அஸ்வனி குமார் - இவர் பிரபல ஓடிடி நிறுவனங்களின் சர்வரை ஹேக் செய்து திரைப்படங்களின் எச்.டி பிரதிகளை திருடியுள்ளார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிரில் ராஜ் - இவர் சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை நிர்வகித்து அதன் மூலம் 2 கோடி வரை (கிரிப்டோகரன்ஸி) சம்பாதித்துள்ளார்
ஹைதராபாதை சேர்ந்த ஜனா கிரண் குமார் : திரையரங்குகளில் மறைமுகமாக கேமரா மூலம் 100 படங்களுக்கும் மேல் பதிவு செய்துள்ளார்
ஈரோடைச் சேர்ந்த சுதாகரன் : இவர் 35 தென் இந்திய படங்களை மறைமுக கேமரா வழி பதிவு செய்துள்ளார்
அர்ஸலான் அகமத் : இவர் பல்வேறு தளங்களில் சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றவும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் அவற்றை பகிர்ந்துள்ளார்.
குழு தலைவன் ரவி இமாண்டி
இந்த ஐந்து பேர் கொண்ட கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு வந்தவர் ரவி இமாண்டியை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி இரவு குகட்பள்ளியில் வைத்து காவல்துறை கைது செய்தது. ரவி இமாண்டியை விசாரணை செய்தபோது பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கிட்டதட்ட 65 இணையதளங்களின் வழியாக சட்டவிரோதமாக திரைப்படங்களை இந்த கும்பல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ரவி சுமார் ரூ 20 கோடி வரை சம்பாதித்துள்ளார். ரவி இமாண்டியிடம் இருந்து கைபற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கில் சுமார் 20 ஆயிரம் பல்வேறு மொழி திரைப்படங்கள் இருந்துள்ளன . மேலும் சட்டவிரோதமாக திரைப்படங்களை தரவிரக்க வரும் இணைய பயண்பாட்டாளர்களை பிற பெட்டிங் ஆப்களை பயண்படுத்தவும் ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார். இந்த ஆப்களை தரவிரக்கும் பயண்பாட்டாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் , வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவற்றை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.