பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவைக்கு வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்க பிரதமர் வருகிறார். இந்த மாநாட்டில் 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவை விமான நிலையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்பு இரவு நேரத்தில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராத கட்டணம் வசூலிக்கப்படும். நாளை செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலையம் முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தக் கூடாது. அதே நேரத்தில் முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்த தடையும் இல்லை. நாளை, நாளை மறுநாள் வரை பயணிகள் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும், இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புக்கான ஒரு பகுதியாகும்.
இதற்கு அனைத்து பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த தடையால், நாளை மற்றும் நாளை மறுநாள் வரை பயணிகள் தங்கள் வாகனங்களை விமான நிலையத்தின் வழக்கமான நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு 3 நிமிடங்கள் வரை அனுமதி உண்டு. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பிரதமரின் வருகையை சுமூகமாக நடத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பயணிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.