ரஜினிகாந்த்


இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக திகழும் அவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று உலகம் முழுவதும் உள்ள பலரும் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர்.இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் ரஜினிகாந்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானில் ப்ளாக்பஸ்டர் ஹிட் வெற்றி பெற்றது. 


ரஜினி பற்றி ஹ்ரித்திக் ரோஷன்


1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் இந்தியில் நடித்த படம் பகவான் தாதா. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்திருந்தார். தற்போது 51 வயதான ஹ்ரித்திக் ரோஷன் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறு வயதில் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்துகொண்டார். 


" ரஜினியுடன் நடித்தபோது அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று எனக்கு தெரியாது. ஒரு முட்டாள் சிறுவனாக நான் இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் ரஜினி அங்கிள். எனக்கு தோன்றிய மாதிரி நான் அவரிடம் பேசுவேன். இன்று அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ரொம்ப வித்தியாசமானவனாக இருப்பேன். அந்த மாதிரியான ஒரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது பெரும் சுமையாக எனக்கு இருந்திருக்கும். நாங்கள் சேர்ந்து நடிக்கும் போது நான் ஏதாவது தவறு செய்தால் இயக்குநர் உடனே கட் சொல்லிவிடுவார். உடனே ரஜினி அவர் தப்பு செய்த மாதிரி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்பார். ஒவ்வொரு முறை நான் தப்பு செய்யும் போது நான் பதற்றமாகிவிடக் கூடாது என்பதற்காக.  ரஜினி அந்த பழியை ஏற்றுக் கொண்டார்.  " என ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்