தமிழ் சினிமா கண்ணை மூடினால் அதற்குள் தோன்றுவது சில்க் ஸ்மிதாவின் கண்கள்தான். அப்படி தமிழ் சினிமாவே காதலித்த கண்கள்தான் அவருடையது. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு என்ற சொற்றொடர் கனகச்சிதமாக பொருந்துவது சில்க் ஸ்மிதாவுக்குதான். தன் காந்த பார்வையால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கட்டிப் போட்டவர், எப்போது சில்க் வருவார் என்று பல நெஞ்சங்களை காத்திருக்க செய்தார்.


தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்களும் நிரம்பியது. ஆந்திர பிரதேச மாநிலம் ஏலூரு பகுதியில், 1960-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் இந்த விஜயலட்சுமி. 1970-ஆம் ஆண்டுகளில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவருக்கு, 14 வயதில் பெற்றோர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.


சிறுவயதிலேயே கட்டாயத்தின் பேரில், திருமணமாகி, சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


அவர் அந்தத் திருமண வாழ்க்கையில், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மாநிலம் விட்டு ஓடிவந்து  நடிகை ஆகவேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.



சென்னைக்கு வந்ததும் முதலில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும்போது, டச்-அப் செய்பவராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பெயர் வராத அளவுக்கு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் ஆங்காங்கே தோன்றியுள்ளார். அந்த நேரத்தில், சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தவர், பிரபல தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்திதான். ஏவிஎம் வாசலில் சில்க் ஸ்மிதாவை பார்த்த வினுசக்கரவர்த்தி, தான் இயக்கிய 'வண்டிச்சக்கரம்' என்கிற திரைப்படத்தில் சிலுக்கு சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தை கொடுத்தார்.


அந்த படத்தில் அவர் பெயர்தான் சிலுக்கு. தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி, முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். அந்த படத்தில் வந்த பெயரே பின்னர் இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.


இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.



நடிகை ஆனதும், ஆங்கிலம் மற்றும் நடனமும் கற்று தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்ட இவர்,   "இணையே தேடி" என்கிற திரைப்படம் மூலம் 1979-இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். இவரது 'மூன்று முகம்' படத்தில் நடித்த கவர்ச்சியான, துணிச்சலான கதாபாத்திரம் இவரை தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய துறைகளிலும் புகழ்பெற செய்தது. குறிப்பாக 1980களில் இவரது கவர்ச்சி நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு திரையுலகைள உயர்ந்தார்.


கவர்ச்சி மட்டுமில்லை. குணச்சித்திர கதாபாத்திரங்களில் முன்னணி நடிகைகளையே புருவம் உயர வைக்கும் அளவுக்கு நடித்து அசத்தினார்.


முன்னணி நடிகர்கள் பலர் இவரது நடனம் தன்னுடைய படங்களில் வேண்டும் என்கிற அளவிற்கு சில்க் ஸ்மிதாவின் வளர்ச்சி இருந்தது. கவர்ச்சியில் இருந்து சற்று விலகி...  அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த குடும்ப பாங்கான நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார் சில்க் ஸ்மிதா. தமிழைக் காட்டிலும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டிய சில்க் ஸ்மிதா, மலையாள திரையுலகில் நடிக்க வாய்ப்புடைய கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதாக எண்ணினார்.



கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா, ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சில்க் ஸ்மிதா, அன்றைய தேதியில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது, நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது எழுந்து நிற்க மறுத்தது உள்ளிட்டவை சில்க் ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக இன்றும் வரலாற்றில் சித்தரித்துக் கொண்டிருக்க, தான் சம்பாதித்த பணத்தை பண்ணையார்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க் ஸ்மிதாவின் மற்றொரு முகம் பலரும் அறியாத ஒன்று.


சில்க் ஸ்மிதா தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார், பல தோல்வியுற்ற உறவுகள் மற்றும் நிதி இழப்புக்குப் பிறகு அவர் மன அழுத்தத்தால் சூழப்பட்டுள்ளார். செப்டம்பர் 23, 1996 அன்று சென்னையில் உள்ள அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சில்க் ஸ்மிதாவின் உடலை பெற ஆள் இல்லாத நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.


எவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும், தென்னிந்தியாவின் ஒவ்வொருவரும் விரும்பி ரசித்த மனிதர் சில்க் ஸ்மிதா. இன்றும் அவரது நடனம் ஏதோ ஒரு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அவர் வரைபடம் சினிமா ரசிகர்களின் ஸ்டூடியோக்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது… அவரது கூரான பார்வை சமூகத்தை நோக்கிய கேள்விகளை வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.