பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்எல்ஏவின் தாயார், அரசுப் பள்ளியில் துப்புரவு பணியாளராக இன்றளவும் வேலை பார்த்து வருகிறார். மகன் தேர்தலில் வென்ற பிறகும், துப்புரவு பணியாளர் வேலையை விடமறுக்கும் தாயாரின் வேலை மீதான பற்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த வருகிறது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் லாப் சிங் உகோக். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எதிர்த்து பாதூர் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 10-ம் தேதி முடிவுகள் வெளிவந்த நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது மட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் தொகுதியான பாதூர் தொகுதியில் முதல்வரை தோற்கடித்து ஆம் ஆத்மியின் லாப் சிங் உகோக் சிறப்பான வெற்றியை பெற்றார். முதல்வர் சன்னியை 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் லாப் சிங் வென்றார்.



இதற்கு முன்புவரை லாப் சிங், மொபைல் போன்களை ரிப்பேர் பார்க்கும் கடையை நடத்தி வந்தார். இவரது தயார் ஒரு அரசுப்பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். லாப் சிங் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், அவரது தாயார் பல்தேவ் கவுர் அரசுப் பள்ளியில் துப்புரவு பணியாளராக தனது பணியை தொடர்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'மகன் எம்எல்ஏ ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது செலவுக்கான பணத்தை நானே உழைத்து சம்பாதித்துக் கொள்வேன். மகன் நல்ல பதவியில் இருந்தாலும், பள்ளியில் நான் செய்ய வேண்டிய வேலைகளை தொடர்ந்து செய்வேன்." என்று கூறியிருக்கிறார்.






மேலும் அவர் பேசுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட போதிலும் எனது மகன் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு முன்னரே இருந்தது." என்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்ரித் பால் கவுர் கூறுகையில், 'லாப் சிங் படித்த பள்ளியில்தான் அவரது தாயார் வேலை பார்த்து வருகிறார். எம்எல்ஏ ஆகியிருப்பதன் மூலம் தனது கிராமத்திற்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.' என்று கூறினார். எம்எல்ஏ லாப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். மகனின் வெற்றி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "மக்கள் எனது மகனை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மக்களின் நலனுக்காக அவர் உழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எப்போதும் போல எங்களது இயல்பான வாழ்க்கையை நாங்கள் வாழ்வோம்" என்றார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரசுக்கு 18 தொகுதிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.