எதார்த்தமாக நடந்ததோ... திட்டமிட்டு நடந்ததோ... ஆனால் அது நடந்தது. இரு துருவங்களாக நிற்கும் அஜித்-விஜய் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ‛ராஜாவின் பார்வையிலே...’. அந்த படம் எடுக்கும் போது அவர்கள் இருவரும் சாதாரண நடிகர்கள். இன்று அசாதாரணமானவர்கள். இன்று சூழலில் இருவரில் ஒருவரின் டேட் வாங்குவதே சவாலானது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன் இருவரின் டேட் வாங்கி, அதை படமாக்கிய பெருமை ஸ்ரீமாசானி அம்மன் மூவிஸிற்கு உண்டு. எப்படி சாத்தியமானது இது? இரு துருவங்களை அன்று அடையாளம் கண்டது எப்படி? அனைத்தையும் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.செளந்தர பாண்டியன் இதற்கு முன் பகிர்ந்திருக்கிறார். இதே அவை....
அஜித்-விஜய் இருவரையும் முதலில் சந்தித்த அனுபவம்?
ராஜாவின் பார்வையிலேயே கதை ரெடியானதும் யாரை போடலாம் என யோசித்தோம். அப்போது ரசிகன் 100வது நாள் ஓடிக்கொண்டிருந்தது. தேவா சூட்டிங் ஸ்பாட் சென்று எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதை சொன்னோம். விஜயிடம் கதை சொல்ல சொன்னார். அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். அவரும் பிடித்துவிட்டது என்றார். கதைப்படி இருவர் வேண்டும். என் தம்பிக்கு அஜித் பழக்கம். எனக்கும் நல்ல பிரண்ட். சொன்னதுமே நடிக்கிறேன்னு சொல்லிட்டார். இருவருமே எந்த நிபந்தனையும், கோரிக்கையும் வைக்கல. சூட்டிங் ஆரம்பிச்சுட்டோம்.
முதல் நாள் சூட்டிங் எப்படி இருந்தது?
முதல் நாள் சூட்டிங்கிற்கு விஜய் வந்தார். ரொம்ப அமைதியா இருக்கிறாரே எப்படி பெர்பாமன்ஸ் செய்வார் என அனைவரும் சொன்னார்கள். ஆனால் கற்பூரம் போல விஜய் இருந்தார். பைட், டான்ஸ் எல்லாம் சிறப்பா செய்தார். எஸ்.ஏ.சி., சார் இல்லைன்னா என்னால் அதை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது.
இந்த உயரத்திற்கு வருவார்கள் என அப்போது தெரிந்ததா?
அப்போ அவர்கள் ரெண்டு பேருமே ரொம்ப எளிமையானவங்க. முதல்நாள் சூட்டிங் அப்போ நல்ல மழை. அப்போ கேரவேன் கிடையாது. அவங்க எதையும் பொருட்படுத்தாமல் நடிச்சாங்க. போட்டி போட்டு நடிச்சாங்க. இன்று அவர்கள் சூப்பர் ஸ்டாரா இருக்கலாம். ஆனால் அன்று அவர்களிடம் உழைப்பு இருந்தது. சின்ஸ்சியாரிட்டி இருந்தது. அதனால் தான் உயர்ந்து நிற்கிறாங்க.
சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் வீட்டு சாப்பாடு தான் வருமாமே?
விஜய் சார் அம்மாவும் அப்பாவும் தான் எங்களை முழுமையா என்கரேஜ் பண்ணாங்க. விஜய் வீட்டில் இருந்து தான் உணவு வரும். ஸ்பாட்டுக்கு வந்து நல்லா பேசுவாங்க. எல்லாரும் அவங்க சாப்பாடு தான் சாப்டுவோம்.
அஜித் உடனான நெருக்கம் எப்படி இருந்தது?
1993ல் இருந்தே அஜித் எனது நண்பர். பெரும்பாலும் அவர் எங்க ஆபிஸில் தான் இருப்பார். நாங்க அவர் வீட்டில் இருப்போம். அதனால படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவருடன் நெருக்கம் இருந்தது.
விஜய்-அஜித் ஏதாவது ஒப்பீடு செய்ய முடியுமா?
இரண்டு பேருமே இன்று எம்.ஜி.ஆர்., மாதிரி இருக்காங்க. நான் படம் பண்ணி தோற்று போயிட்டேன். ஆனால் தம்பிங்க இரண்டு பேரும் எங்கேயோ போய்டாங்க. விஜய் ஒரு பெரிய இயக்குனரின் மகன். அஜித் சாதாரண குடும்பத்தின் மகன். ஆனாலும் இருவரும் அவ்வளவு நட்பா இருப்பாங்க. அவங்க அளவுக்கு யாரும் நட்பா இருக்க முடியாது.
ராஜாவின் பார்வையிலேயே படபூஜை எப்படி இருந்தது?
பூஜை நடந்த ஸ்டூடியோவில் முத்து படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தத. சூப்பர் ஸ்டார் இருக்காரேன்னு சும்மா போய் கூப்பிட்டோம். மேக்கப் கூட கலைக்காம வந்துட்டாரு. எங்களுக்கே ஒரே ஷாக். சங்கர் சார் வந்தாரு. 23.11.1994ல் பூஜை நடந்தது. அன்று அஜித் ஊரில் இல்லை. அதனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
விஜய்-அஜித்திற்கு சம்பவளம் கொடுத்தது நினைவு இருக்கிறதா?
படத்தோட மொத்த செலவே ரொம்ப கம்மி தான். அதுல அவங்களுக்கு என்ன பெருசா சம்பளம் கொடுத்துட போறோம். ஆனால் விஜய் வெளி தயாரிப்பாளரிடம் நடித்த முதல் படம் அது. ரொம்ப கம்மியான சம்பளம் தான் வாங்குனாரு. அஜித் அந்த சம்பளத்தை கூட வாங்கல.
மீண்டும் அவர்களை இணைக்க முடியுமா?
நான் திரும்பி பார்ப்பதற்குள் அவர்கள் எங்கேயோ பறந்துட்டாங்க. அடுத்த15 ஆண்டுக்கு பிறகு தான் அஜித்தை பார்த்தேன். இனி இரண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வைக்க முடியாது. இரண்டும் இரு இமயங்கள். ஒருவர் கால்ஷூட் கிடைப்பதே கஷ்டமானது.
இது தான் ராஜாவின் பார்வையிலேயே தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல். உண்மையில் அஜித்-விஜயை இணைத்து படம் எடுக்க முடியுமா என்றால் அது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும். அஜித்-விஜய், இன்று தல-தளபதியாய் நிற்கின்றனர். ஒருவர் பார்வை அல்ல இருவர் பார்வை பட்டால் தான் இன்னும் ஒரு ராஜாவின் பார்வையிலே வரும்.