தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. சின்ன பையன் இவன் என்ன பெருசா படம் எடுத்துட போறான் என நினைத்தவர்களை எல்லாம் வெட்கப்பட்டு தலைகுனிய வைத்தவர் இயக்குநர் அட்லீ.
ஆரம்பமே அசத்தல் :
பிரமாண்ட இயக்குநர் என தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான நண்பன், எந்திரன் உள்ளிட்ட படங்களின் சமயத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அட்லீ. அந்த சமயத்திலேயே தன்னுடைய திறமையால் பலரையும் ஆச்சரியப்படுத்தியவர்.
2013ம் ஆண்டு 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக பரிணாமம் எடுத்த அட்லீ முதல் படத்திலேயே நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் என வலுவான ஒரு கூட்டணியுடன் களம் இறங்கினார். முதல் படத்திலேயே 'யாருடா இது ' என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அப்படம் ஒரு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
பாலிவுட் என்ட்ரி :
3 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க மற்றுமொரு மாஸான தெறிக்கவிடும் வெற்றி படத்தை கொடுத்தார். அது தான் 'தெறி'. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த அட்லீ அதை தொடர்ந்து மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தார். அதை தொடர்ந்து 5வது படத்தில் நேரடியாக பாலிவுட்டில் நுழைந்து அங்கும் சென்று தன்னுடைய கொடியை நிலைநாட்டிவிட்டார்.
சிகரம் தொட்ட நாயகன் :
பாலிவுட் கிங் கான் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என ஹிந்தியில் களமிறங்கிய முதல் படத்திலேயே தாறுமாறான வெற்றியை பெற்று உலகளவில் 1000 கோடியையும் தாண்டி வசூல் செய்து சிகரம் தோட்ட வெற்றி நாயகனாக ஜொலித்தார். ஐந்தே படங்களில் இப்படி ஒரு வளர்ச்சி என்றால் அது அவரின் திறமைக்கும் கடுமையான உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் மட்டுமே.
அட்லீ பெயர் காரணம் என்ன ?
இப்படி அனைவரும் அட்லீ என கொண்டாடி வருகிறோம் ஆனால் அவரின் உண்மையான பெயர் அருண் குமார் என்பது பலரும் அறிந்திடாத விஷயம். அது எப்படி அருண் குமார் அட்லீ ஆனார் என்பதை அவரே நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
"என்னுடைய பெரியப்பா ஜட்ஜாக இருந்தார். வீட்ல எல்லாருக்குமே செல்ல பெயர் வைப்பார். அப்படி அவர் எனக்கு வைச்ச செல்ல பெயர் தான் அட்லீ. கிளமெண்ட் அட்லீ ஞாபகமாக என்னை அட்லீ என கூப்பிட்டார். அது நம்ம ஊரு இட்லி வார்த்தைக்கு கனெக்டடாக இருக்க என்னை எல்லாரும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. வீட்ல கூட அருண் என என்னுடைய பெயரை விட்டுட்டு அட்லீன்னு தான் கூப்பிடுவாங்க. என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே என்னை அப்படியே கூப்பிட்டதால் எங்க ஊரில், எங்க ஏரியாவில் யாரிடம் கேட்டாலும் என்னை அட்லீயாக தான் தெரியும். அருண் குமார் என்ற பெயர் என்னுடைய ஸ்கூல் ரெகார்ட்களிலும், அரசு சான்றிதழ்களிலும் மட்டுமே இருக்கும்.
என்னுடைய முதல் ஷார்ட் பிலிம் எடுத்த பிறகு அதில் அருண் குமார் என போட்டு அதை என்னோட அம்மாகிட்ட தான் முதல்ல காமிச்சேன். அதுக்கு என்னோட அம்மா ஏன் அருண் குமார்ன்னு போடுறா? அட்லீனு போடு. அப்படி தானே நாங்க எல்லாரும் உன்னை கூப்பிடுறோம். உன்னோட கிளாஸ்லேயே அருண் குமார்னு மூணு பேர் இருக்காங்க. நிறைய பேரோட பெயர் அருண் குமார்னு தான் இருக்கும். அதனால நீ அட்லீனு போடுன்னு சொன்னாங்க.
அவங்க ரொம்ப சாதாரணமா தான் சொன்னாங்க நானும் அதை பெரிய விஷயமா எடுத்துக்கல. ஆனா அந்த ஷார்ட் பிலிமுக்கு நேஷனல் லெவெலில் விருது கிடைச்சதும் அந்த எமோஷன்ல அப்படியே சென்டிமெண்டா அதையே தொடர்ந்து வைச்சுகிட்டேன்" என்றார் அட்லீ.